ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை சம்பந்தமாக விசாரணையை விரைவுப்படுத்தி குற்றவாளிகளை சட்டத்திற்கு முன் கொண்டு வருமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது. “புரவசி பலய” என்ற அமைப்பினால் இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை சம்பவம் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பிரதான தலைப்பாக இருந்தது என்று சுட்டிக்காட்டியுள்ள அந்த அமைப்பு, கொலையாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி நீதியை நிலை நாட்டுவது இலங்கையின் முதற் பிரஜையின் பொறுப்பாகும் என்று கூறப்பட்டுள்ளது. அதற்கு நியாயம் வழங்காமல் தப்பிச் செல்வதற்கு முடியாது என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை சம்பந்தமாக விசாரணை செய்த குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி உங்களின் ஆணையின் படி இடமாற்றம் செய்யப்பட்டதை அறிந்து தாம் வருத்தப்பட்டதாகவும் ஜனாதிபதிக்கான அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை சம்பந்தமாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல விடயங்கள் வௌிச்சத்துக்கு வந்திருப்பதை தமது அமைப்பு அறிந்துள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.