பருவநிலை மாற்றம் குறித்து கவனம் செலுத்தவில்லையானால், அமெரிக்காவுக்கு பல பில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்படுவதுடன் மனித ஆரோக்கியத்துக்கும், வாழ்க்கை தரத்துக்கும் பாதிப்பும் ஏற்படும் என அந்நாட்டின் பருவநிலை குறித்த அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்காலத்தில் பருவநிலை மாற்றத்தால் வரக்கூடிய ஆபத்துக்களை நாம் இன்று எடுக்கக்கூடிய முடிவுகள் தீர்மானிக்கும் என நான்காவது தேசிய பருவநிலை ஆய்வு தெரிவித்துள்ளது.
மனித சுகாதாரம், பாதுகாப்பு, வாழ்க்கை தரம் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் விகிதம் ஆகியவற்றுக்கு பருவநிலை மாற்றம் பெரும் சவாலாக இருக்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் பல அமெரிக்க அரசு நிர்வாகங்கள் மற்றும் துறைகள் பலவற்றின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கை சரியானது இல்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. நீண்டகாலமாக நிறுவப்பட்ட சூழலில் இருந்து முரண்பட்டு இந்த அறிக்கை உள்ளது என வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் லிண்ட்சே வால்டர்ஸ் தெரிவித்துள்ளார்.