உலக அதிசயங்களில் ஒன்றாக திகழ்கின்ற இத்தாலியின் பைசா நகரத்தில் உள்ள சாய்ந்த கோபுரம் மேலும் 4 சென்ரி மீற்றர் அளவுக்கு நிமிர்த்தப்பட்டுள்ளதனையடுத்து அதற்கு இனி ஆபத்து இல்லை என பொறியிலாளர்கள் தெரிவித்துள்ளனர். கி.பி. 1173-ம் ஆண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1372-ம் ஆண்டு முடிக்கப்பட்ட பைசா கோபுரம் 186 அடி உயரத்தில் 7 மாடிகளுடன் உள்ளது.
ஆரம்பத்திலிருந்தே கோபுரம் சிறிது சிறிதாக சாயத் தொடங்கியதனையடுத்து அது விழுந்து விடாமல் தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. 1990-ம் ஆண்டளவில் கோபுரம் சாய்வது மேலும் அதிகரித்ததனால் அதன் சாய்வு 5.5 பாகை கோணத்தில் அமைந்து இருந்ததனையடுத்து கடந்த 11 ஆண்டுகளாக அதன் அருகே யாரையும் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
நிபுணர்கள் குழு மூலம் ஆய்வுகளை மேற்கொண்டு தடுக்கும் முயற்சிகளை செய்ததன் மூலம் கட்டிடம் மேலும் சாய்வது நிறுத்தப்பட்டதுடன் கொஞ்சம் கொஞ்சமாக அதை நிமிர்த்தும் பணிகளும் இடம்பெற்றன.
அதன் மூலம் 14 செ.மீற்றர் அளவுக்கு கோபுரம் நிமிர்த்தப்பட்ட நிலையில் தற்போது மேலும் 4 சென்ரி மீற்றர் அளவுக்கு கோபுரத்தை நிமிர்த்தி உள்ளனர். இதனால் கோபுரம் இன்னும் வலுவாகி உள்ளது எனவும் இனி கட்டிடத்துக்கு ஆபத்து இல்லை எனவும் பொறியிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.