மைத்திரி – மகிந்தவின் சர்வாதிகார ஆட்சியிலிருந்து நாட்டு மக்களை மீட்டெடுப்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் இலக்கு எனத் தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதை நிறைவேற்றியே தீருவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று கண்டிக்கு சென்றிருந்த ரணில், அங்கு அஸ்கிரிய, மல்வத்து பீட மகாநாயக்கர்களைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார். மல்வத்து பீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர், அஸ்கிரிய பீட மகாநாயக்கர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் ஆகியோர் ரணிலுக்கு ஆசீர்வாதம் வழங்கினர். இதன்பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மைத்திரியின் சதித் திட்டத்தால் கடந்த 26ஆம் திகதி நல்லாட்சி கவிழ்க்கப்பட்டதாகவும் மீண்டும் மகிந்த அரியணை ஏறி சர்வாதிகாரத்தைத் தொடர்வதாகவும் ரணில் குற்றம் சுமத்தினார். எனினும் மைத்திரி – மகிந்தவின் இந்தக் கூட்டாட்சி – சர்வாதிகார ஆட்சிக்கு முடிவுகட்டியே தீருவோம் எனத் தெரிவித்த அவர் சர்வாதிகாரத்திடமிருந்து நாட்டு மக்களை மீட்டெடுப்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் இலக்கு எனவும் தெரிவித்தார்.
மேலும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் இல்லாது ஆட்டம் போடுகின்ற மகிந்த அணியை வீட்டுக்கு அனுப்புவோம் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.