குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வலி.மேற்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரையும் , அவரது நண்பரையும் பிறிதொரு கட்சி உறுப்பினரின் தலைமையிலான குழுவினர் தாக்கியதாக தாக்குதலுக்கு இலக்கானவர்கள் தெரிவித்துள்ளனர். வட்டுக்கோட்டையில் சங்கரத்தை குளத்திற்கு அருகில் கடந்த வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
அதில் வலி. மேற்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் தேவராஜா ரஜீவன் மற்றும் அவரது நண்பரான வெளிநாட்டிலிருந்து தாயகம் வந்துள்ள தேவகுமார் கபிலன் ஆகிய இருவரும் காயமடைந்துள்ளனர்.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தாக்குதலுக்கு இலக்கான இருவரும் சங்கரத்தைக் குளத்துக்கு அருகில் உள்ள வீடொன்றுக்கு சென்ற போது, குளத்திற்கு அண்மையாக சுமார் 40 பேர் கொண்ட கும்பல் வாளுகள் கத்திகள் மற்றும் பொல்லுகளுடன் நின்றுள்ளது. அந்தக் கும்பலுக்கு பிறிதொரு கட்சியை சேர்ந்த வலி.மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் தலைமை தாங்கி நின்றுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் சென்ற சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரை வழிமறித்த அந்தக் கும்பல், கடுமையாகத் தாக்கியுள்ளது. அத்துடன், அவரது நண்பரை வாளால் வெட்டியதுடன் கடுமையாகத் தாக்கியுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த வட்டுக்கோட்டைக் காவல்துறையினர்;, சம்பவத்தை சமூக மட்ட மோதலாக மாற்றுவதற்கு முயற்சிகின்றார்கள் என தாக்குதலுக்கு இலக்கானவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அதேவேளை சம்பவத்தை காவல் நிலையத்துடனேயே முடிக்குமாறு அமைச்சர் ஒருவர் வட்டுக்கோட்டை காவல்துறையினருக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் தாம் வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த போதிலும் தம் மீது தாக்குதல் நடத்தியவர்களை காவல்துறையினர் கைது செய்யவில்லை எனவும் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்