வெளிநாட்டிலிருந்து எவ்வளவு கறுப்புப் பணம் மீட்கப்பட்டுள்ளது என்பது பற்றிய தகவல்களை வழங்குவதற்கு இந்திய பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்ட கறுப்புப் பணம் மற்றும் இந்தியர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ள பணத்தின் விவரங்கள் குறித்த தகவல்களை மத்தியத் தகவல் ஆணையத்திடம் வனத் துறை அதிகாரியான சஞ்சிவ் சதுர்வேதி கேட்டுள்ளார். தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் அவருக்குத் தகவல் வழங்க மத்தியத் தகவல் ஆணையகம் மறுப்பதாகத் தொடர்ந்து அவர் குற்றம் சுமத்தி வந்த நிலையில் தற்போதும் அவருக்குப் பதிலளிக்க பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 8 பிரிவு 2-இன் கீழ் இவ்விவரங்கள் தகவல் என்ற வரையறைக்குள் வருவதில்லை எனத் தெரிவித்தே இவ்வாறு வெளிநாட்டிலிருந்து மீட்கப்பட்ட கறுப்புப் பணம் குறித்த தகவல்களளை வழங்க மறுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சஞ்சிவ் கோரியுள்ள தகவல்களுக்குப் பிரதமர் அலுவலகம் 15 நாட்களுக்குள் உரிய விளக்கத்தை வழங்க வேண்டுமென தலைமை தகவல் ஆணையாளர் ஒக்டோபர் 16ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, தற்போது சஞ்சிவ் சதுர்வேதிக்கு உரிய பதிலை அளிக்க மறுத்துள்ள பிரதமர் அலுவலகம் இதுகுறித்த விசாரணைக்கு, சிறப்பு புலனாய்வுத் துறை அமைக்கப்பட்டு விசாரணை ஏற்கெனவே நடைபெற்று வருகிறது. குற்றவாளிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்போது அந்த விவரங்களை வெளியிடுவது விசாரணையைத் தாமதப்படுத்தும். எனவே, இதுகுறித்த விவரங்களை வெளியிடுவதற்கு சட்டப் பிரிவு 8(1)லிருந்து இதற்கு விலக்கு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது