மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை நேரில் அவதானிக்க இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜோர்ன் ரோட் (Jorn Rohde) மன்னாருக்கு நேரில் சென்று மனித புதைகுழி அகழ்வு பணிகளை நேரடியாக அவதானித்ததோடு,அகழ்வு பணிகள் தொடர்பில் பணிக்குப் பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸவுடன் கலந்துடையாடியுள்ளார்.
பலத்த மழை காரணமாகவும்,அரச பணி காரணமாகவும் மன்னார் வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ வெளிநாடு சென்றதாலும் அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப் பட்டிருந்த நிலையில் 105 ஆவது நாளாக இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.
இன்றைய அகழ்வு பணி தொடர்பில் செய்தி சேகரிக்க வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் குழு ஒன்றும் வருகை தந்திருந்தது.தற்போது வரை 239 மனித எலும்புக்கூடுகள் குறித்த அகழ்வு பணிகளின் போது கண்டு பிடிக்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளதோடு, அவற்றில் 230 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.