தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் போராட்டம் நடைபெற்ற போது இடம் பெற்ற துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானதை அடுத்து அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தும், ஆலையை ஆய்வு செயய் 3 பேர் கொண்ட குழுவை அமைத்தும் உத்தரவு பிறப்பித்தது.
அத்துடன், ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யுமாறும் அந்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மற்றும் சீராய்வு மனு ஆகியன தள்ளுபடி செய்யப்பட்டன. இதேவேளை தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித் குழுவினர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலும் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆய்வு நடத்தியதுடன் சென்னை நகரிலும் விசாரணை மேற்கொண்டு அது தொடர்பான ஆய்வறிக்கையை தனித்தனியாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
இதையடுத்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் அமர்வில் இன்று புதன்கிழமை ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கத
இன்று வழங்கப்போகும் தீர்ப்பில் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படுமா அல்லது மீண்டும் திறக்கப்படுமா என்பது தீர்மானிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.