இலங்கை பிரதான செய்திகள்

தலைகீழ் மாற்றம் -பி.மாணிக்கவாசகம்

ஜனநாயகத்தில் பெரும்பான்மை பலமே தீர்க்கமானது. தீர்மானிக்க வல்லது. ஆனாலும், சிறுபான்மையின் நியாயமான கருத்துக்களை உள்ளடக்கி, பெரும்பான்மையாக எடுக்கப்படுகின்ற முடிவுகள் அந்த ஜனநாயக சக்திக்கு அல்லது பலத்திற்குப் பெருமை சேர்ப்பதாக அமையும். அத்தகைய செயற்பாடுகளின் மூலம் ஒரு ஜனநாயக அரசு மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்றுத் திகழும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஆசியாவில் நீண்டகால ஜனநாயகப் பெருமையுடையதாகக் கருதப்படுகின்ற இலங்கையின் ஜனநாயகம் அப்படியல்ல, தலைகீழானது என்பதை தற்போது அரசியல் அதிகாரத்துக்காக எழுந்துள்ள அரசியல் நெருக்கடி  நிலைமைகள் வெளிப்படுத்தி வருகின்றன.
எண்ணிக்கையில் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய தேசிய முன்னணி நிராகரிக்கப்பட்டு, குறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினராகிய மகிந்த ராஜபக்சவை நிறைவேற்று அதிகார பலத்தைப் பயன்படுத்தி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமித்துள்ளார்.
உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையிலான பெரும்பான்மை பலத்தைக் கொண்டு, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகளில் நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கொண்டு வரப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. ஆனால்  வேடிக்கையான நிலைமையாக, சிறுபான்மை பலத்தைக் கொண்ட அரசாங்கமே இன்னும் ஆட்சிக்குப் பொறுப்பாக இருப்பதாகக் கூறப்படுகின்றது.
பிரதமர் ஒருவரின் தலைமையிலான அரசாங்கம் என்று கூறப்படுகின்ற தரப்பினர், நாடாளுமன்றத்தில் தெரிவுக்குழுக்கான உறுப்பினர்களை நியமிக்கும் நடவடிக்கையின்போது முரண்பட்டுக் கொண்டு சபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார்கள். எதிரணியில் உள்ள கட்சிகளைச் சேர்ந்தவர்களே, கருத்து முரண்பாடு காரணமாக சபையில் இருந்து வெளிநடப்பு செய்வது வழக்கமான செயற்பாடாகும். ஆனால், இலங்கையில் நடைமுறையில் உள்ள ஜனநாயத்தில் அரசாங்கத் தரப்பினர் வெளிநடப்பு செய்ய, சபை நடவடிக்கைகளை எதிர்க்கட்சியினர் என கருதப்படுபவர்களினால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் தலைகீழ் மாற்றத்திற்கு முழு உரிமை கொண்ட நாடாக இலங்கை அரசியல் வரலாற்றில் பதிவாகியிருக்கின்ற வேடிக்கையான நிகழ்வு நடந்தேறியிருக்கின்றது.
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அரசியல் நெருக்கடியில் சிக்கி தவிக்கின்ற இந்த அரசாங்கத்தின் தலைவராகிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுன்றத்தின் உரிமைகளைத் தொடர்ந்து உதாசீனம் செய்து வருவதையே காண முடிகின்றது. பெரும்பான்மை பலமில்லை என்று தெரிந்து கொண்ட பின்னரும், அத்தகைய பலமில்லாத கட்சியைச் சேர்ந்த ஒருவரை பிரதமராக நியமத்துள்ள ஜனாதிபதி அந்தக் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலமில்லை என்பதை ஏற்றுக்கொள்ள தொடர்ந்து மறுத்து வருகின்றார். இந்தப் பிடிவாதத்திற்கு நிறைவேற்று அதிகாரம் அவருக்குக் கவசமாகவும் துணையாகவும் அமைந்துள்ளது.
அது மட்டுமல்லாமல், நாடாளுமன்ற நடைமுறைகள் என தான் கூறுகின்ற நடைமுறைகளுக்கு அமைய பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கின்ற கட்சியைச் சேர்ந்தவரைப் பிரதமராக நியமிப்பேன் என்றும் கூறி வருகின்றார். அவ்வாறு ஐக்கிய தேசிய முன்னணியினர் நாடாளுமன்றத்தில் தமது பெரும்பான்மைப் பலத்தை நிரூபித்தாலும்கூட, கடந்த பொதுத் தேர்தலின் பின்னர் ஜனநாயக ரீதியாகவும், நாடாளுமன்ற நடைமுறைகளுக்கு அமைவாகவும் பிரதமராக நியமிக்கப்பட்டு, ஆட்சி நடத்தி வந்த ரணில் விக்கிரமசிங்கவை எந்தக் காரணத்தைக் கொண்டும் மீண்டும் பிரதமராக நியமிக்க முடியாது என்று கடும் போக்கில் உறுதியானதொரு நிலைப்பாட்டை அவர் எடுத்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேன, சந்திரிகா குமாரணதுங்க என்ற மூவர் கொண்ட கூட்டு அமைப்பு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் இணைந்து உருவாக்கிய நல்லாட்சி அரசாங்கம், மூன்றரை வருடங்களில் நிலைகுலைந்து, பல்வேறு நடவடிக்கைளின் மூலம், ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி உள்ளது. இங்கு பெரும்பான்மை குறித்து எந்த அக்கறையும் இல்லை. மாறாக நிறைவேற்று அதிகாரம் என்ற ஜனாதிபதி ஆட்சிமுறையில் எந்த அளவுக்கு நாடாளுமன்றத்தைப் புறக்கணித்து, முறைகேடாக மோசடியாக நடந்து கொள்ள முடியுமோ அந்த அளவுக்கு, நடவடிக்கைகளை முன்னெடுக்கின்ற போக்கிரித்தனமான செயற்பாடுகளையே நிறைவேற்று அதிகாரத்திடம் காண முடிகின்றது.
சிலுசிலுப்பே அதிகம் 
;ஜனநாயகம் என்பது மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படுகின்ற பிரதிநிதிகளைக் கொண்ட நாடாளுமன்றத்திலேயே உயிர்ப்புடன் திகழ்கின்றது, அங்கு நாட்டு மக்களுடைய கருத்துக்களைப் பிரதிபலித்து, அவர்களின் நலன்கள் சார்ந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அந்த நடவடிக்கைகளுக்கு ஏற்ற வகையிலான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு சட்டங்கள் ஆக்கப்பட வேண்டும். இதுவே ஜனநாயகத்தின் பண்பு.
அரசியலில் கீரியும் பாம்புமாக எதிர் எதிர் அணிகளில் இருந்து செயற்பட்டு வந்த ஐக்கிய தேசிய கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைத்த நல்லாட்சி அரசாங்கம் ஜனநாயகத்துக்குப் புத்துயிர் அளித்து, புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணும், அதேபோன்று ஏனைய பிரச்சினைகளுக்கும் முடிவு கண்டு நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும் என்று பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது, ஆனால், அந்த எதிர்பார்ப்புக்கள் மூன்றரை வருடங்களில் சுக்குநூறாகி சிதைந்து போயுள்ளன. எந்த வேனையிலும் சர்வாதிகாரம் மேலோங்கி, இறுக்கமானதோர் அதிகாரப் பிடியில் நாடு நிரந்தரமாகச் சிக்கிவிடுமோ என்ற அச்சம் அரசியல் வெளியில்; இப்போது தலைதூக்கி இருக்கின்றது.
இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு பக்கபலமாக இருந்து, அதனை சரிந்துவிடாமல் பாதுகாத்து வந்த பெருமை தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு நிறையவே உண்டு. புதிய அரசியலமைப்பை உருவாக்கி அதன் ஊடாக இனப்பிரச்சினைக்கு நிரந்தரமானதோர் அரசியல் தீர்வு காண வேண்டும் என்ற அரசியல் கனவோடு நல்லாட்சி அரசாங்கத்திற்கு கூட்டமைப்பு நிரந்தரமான ஆதரவை வழங்கி வந்தது. அந்த ஆதரவு நிபந்தனையற்றது.
எதேச்சதிகாரப் போக்கில் இராணுவ வெற்றியை முதலீடாகக் கொண்டு ஆட்சி நடத்திய முன்னாள் ஜனாதிபதியின் ஆட்சியை மாற்றி அமைக்க வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் மிகத் தீவிரமாக இருந்தார்கள். ஆட்சி மாற்றம் ஏற்படுத்த வேண்டும என்பதில், பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் அவர்கள் மிகவும் உறுதியாக இருந்தார்கள். புதிய அரசியலமைப்பின் ஊடாக அரசியல் தீர்வு காண வேண்டும் என்ற கூட்டமைப்பின் கனவுக்கு, தமிழ் மக்களின் இந்த உறுதிப்பாடு, அரசியல் ரீதியாக வலு சேர்த்திருந்தது. இந்தப் பின்னணியில்தான் நல்லாட்சி அரசாங்கம் பிறப்பெடுத்தது,
ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தில் சிலுசிலுப்பே அதிகமாக இருந்தது. செயற்பாடுகளில் அதிக கவனம் செலுத்தப்படவில்லை. மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பு கூறவேண்டும் என ஐநா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு இணை அனுசரணை வழங்கி சர்வதேச அரங்கில் பெருமை தேடிக்கொண்டது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுயை காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பொறுப்பு கூறுதல், அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற முக்கிய பிரச்சினைகளில் உள்ளம் குளிர்ந்து, செவிகள் இனிக்கத்தக்க  வகையில் வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. ஆனால் செயல் வடிவத்தில் அந்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை.
இனிக்க இனிக்கப் பேசுவதில் வல்லவராகத் திகழ்ந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதில் நழுவிச் செல்வதைக் கண்ட தமிழ் மக்கள், அவருடைய அரசியல் தலைமையில் அதிருப்தியடைந்தார்கள். அந்த அரசியல் போக்கு குறித்து சந்தேகம் கொண்டார்கள். ஆனால், தமிழ் மக்களின் முக்கிய அரசியல் தலைமையாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன இணைந்த கூட்டு அரசாங்கத்தை ஆட்டம் காணச் செய்யும் வகையில் சிங்கள மக்கள் மத்தியில் இனவாத பிரசாரத்தோடு எழுச்சி பெற்ற முன்னாள் ஜனாதிபதியினால் வீழ்ச்சி ஏற்படாத வகையில் அரணாக இருந்து செயற்படுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தது.
சர்வதேச அரங்கில் உரிமை மீறல்களுக்கு வகை சொல்ல வேண்டிய பொறுப்பைத் தட்டிக்கழித்துச் செல்ல முற்பட்ட அரசுக்கு கால அவகாசம் வழங்குவதிலும், அதன் மூலம் அதற்கு உறுதுணை வழங்குவதிலும் கூட்டமைப்பு முனைப்புடன் செயற்பட்டிருந்தது. சர்வதேச அரங்கில் அரசாங்கத்துக்கு நிர்ப்பந்தத்தை அல்லது அழுத்தத்தைப் பிரயோகித்து, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுகின்ற உத்தியை, அது கடைப்பிடிக்கவில்லை. அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை, கூட்டமைப்பு இறுகப்பற்றிப் பிடித்திருந்தது. ஆனால் மூன்றரை வருடங்கள் கழிந்தனவே தவிர, புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திலும், போர்க்குற்றச் செயற்பாடுகளுக்கு பொறுப்பு கூறுவதிலும் உரிய முன்னேற்றத்தை அரசு காட்டவில்லை. அவற்றில் இருந்து நழுவிச் செலவதிலேயே அது குறியாக இருந்தது.
இணைந்திருந்தபோது முடியாதது, பிரிந்த பின்னர் முடியுமா?
இத்தகைய ஒரு பின்னணியில்தான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியலமைப்பு விதிகளுக்கு முரணான வகையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அதிரடியாகப் பதவி நீக்கம் செய்து மகிந்த ராஜபக்சவை புதிய பிரதமராக நியமனம் செய்து, மோசமான அரசியல் நெருக்கடிக்கு வித்திட்டிருந்தார்.
பிரதமர் பதவியில் மாற்றங்களைச் செய்தது மட்டுமல்லாமல், நாடாளுமன்றத்தை முடக்கி, பின்னர் அதனைக் கலைத்து பொதுத் தேர்தல் நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டதன் மூலம் தொடர்ந்து அரசியலமைப்பை மீறிய செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தார். நாடாளுமன்றத்தைக் கலைத்தது அரசியலமைப்பின்படி சரியானதா இல்லையா என்பதற்கு நீதிமன்றத்திடம் அடிப்படை உரிமை மீறல் வழக்குகளின் மூலம் விளக்கம் கோரப்பட்டிருக்கின்றது. இந்த விடயத்தில் நீதிமன்றத்திடம் இருந்து எத்தகைய முடிவு வரப்போகின்றது என்பதை ஊகிக்க முடியாதுள்ளது.
அரசியல் நெருக்கடிக்கு நீதிமன்றத்திடம் இருந்து ஒரு வழிகாட்டலை அல்லது ஒரு முடிவை எதிர்பார்த்திருக்கின்ற அதேவேளை, தொடர்ந்து நிலவுகின்ற அரசியல் நெருக்கடிக்கு முடிவு காண்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அந்த முயற்சிகள் எத்தகையவை யாரால், என்ன அணுகுமுறையில் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன என்பது பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைப் பரீட்சித்து, அதன் அடிப்படையில் தற்காலிகமாக ஓர் அரசாங்கத்தை அமைத்து, இன்னும் ஒரு வருட காலத்தைக் கடத்தினால் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்தி அரசியல் நெருக்கடிககு நிரந்தரமான ஒரு தீர்வைக் காணலாம் என்று சில தரப்புக்களில் கருதப்படுகின்றது.
அத்தகைய தற்காலிக அரசாங்கத்தை அமைப்பதற்கான பெரும்பான்மை பலத்தைப் பெறுவதற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் 14 உறுப்பினர்களுடைய ஆதரவு உறுதுணையாக அமையும்.  ஏனெனில் ஐக்கிய தேசிய கட்சியின் ஐக்கிய தேசிய முன்னணிக்கு 103 ஆசனங்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 101 ஆசனங்களுமே இருக்கின்றன. இந்த நிலையில் 225 பேரைக் கொண்ட நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைப் பெறுவதற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜேவிபி ஆகிய கட்சிகளின் ஆதரவை நாட வேண்டிய நிலைமைக்கு இந்த இரண்டு கட்சிகளுமே நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றன. நாட்டின் ஜனநாயகத்திற்கு பாதிப்பு எற்பட்ட சூழலில் எதேச்சதிகாரப் போக்கைக் கொண்ட மகிந்த ராஜபக்சவை எதிர்த்து, ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஆதரவளித்திருந்தது. இது மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நிலைப்பாடு மட்டுமே. ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு நகர்வே அன்றி வேறு ஒன்றுமில்லை. அந்த நோக்கத்திலேயே மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு கூட்டமைப்பு ஆதரவளித்திருந்தது. ஆனால், புதிய அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் மகிந்த ராஜபக்சவைப் புறக்கணித்து, ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்குவதில்லை என்ற நிலைப்பாட்டை கூட்டமைப்பு வெளிப்படுத்தியிருந்த போதிலும், ஐக்கிய தேசிய கட்சிக்கு சார்பான போக்கில் இருந்து அது இன்னும் விடுபடவில்லை என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.
ஐக்கிய தேசிய கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் உள்ளது என்பதைக் காட்டுவதற்காக அதன் ஆதரவு சக்திகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப் பிரமாண ஆவணத்தில் கையெழுத்திட்டு வெளிப்படுத்த வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இவ்வாறு ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளிப்பதில் கூட்டமைப்புக்குள் ஓர் இணக்கப்பாடு இல்லை என்பது வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமராக இருந்த ரணில் வி;க்கிரமசிங்க தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீரு;வு காண்பதில் எந்தவிதமான அக்கறையையும் காட்டவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் போன்று காலம் கடத்துவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்து செயற்பட்டிருந்தார் என்பதை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கடுமையாகச் சுட்டிக்காட்டி வாதிட்டுள்ளனர்.
இரண்டு தேசிய கட்சிகளும் இணைந்து அரசாங்கம் அமைத்திருந்தபோதே, பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாதவர்கள் இரண்டு கட்சிகளும் பிளவடைந்து ஏட்டிக்குப் போட்டியாகச் செயற்படத் தொடங்கியுள்ள நிலையில் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என்ற யதார்த்த நிலைமை உருவாகியிருக்கின்றது.
என்ன செய்யப்போகின்றீர்கள்?
பெரும்பான்மைப் பலத்திற்காக, மகிந்த ராஜபக்ச கூட்டமைப்பின் ஆதரவை நாடியபோது, எழுத்து மூலமான உத்தரவாதம் தர முடியுமா என கோரப்பட்டிருந்தது. அதேபோன்று ரணில் விக்கிரமசிங்கவும் கூட்டமைப்பின் ஆதரவைக் கோரியபோது, அவரிடம் அவ்வாறு எழுத்து மூலமான ஓர் உத்தரவாதம் கோப்படாதது ஏன் என்ற கேள்வி கூட்டமைப்பின் தலைமையை நோக்கி எழுப்பப்பட்டிருக்கின்றது.
சீனச்சார்பு கொள்கையை உடைய மகிந்த ராஜபக்சவிலும் பார்க்க, மேற்குலக சார்பு நிலையைக் கடைப்பிடிக்கின்ற ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாகச் செயற்பட்டு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்பது தமிழ்த்தேசிய கூட்டமைப்புத் தலைமையின் நீண்டகால நிலைப்பாடாக கருதப்படுகின்றது. மகிந்த ராஜபக்சவுடன் கடும்போக்கையும், ரணில் விக்கிரமசிங்கவுடன் மென்போக்கையும் கடைப்பிடிக்கின்ற அரசியல் உத்தியை கூட்டமைப்பின் தலைமை பின்பற்றி வருவதே இதற்குக் காரணம் என்றும் கூறப்படுகின்றது.
ஆனாலும், நல்லாட்சி அரசாங்கம் மூன்றரை வருடங்களாக அதிகார பலத்துடன் இருந்த போது, அதன் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க, கூட்டமைப்பின் நிபந்தனையற்ற ஆதரவைப் பெற்றிருந்த சூழலில்கூட தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் ஆர்வம் காட்டியிருக்கவில்லை. பதவிக்கு வருவதற்காக அல்லது அதிகாரங்களைக் கைப்பற்றுவதற்காக தேர்தல்களின்போதும், நெருக்கடியான சூழல்களிலும் கறிவேப்பிலையைப் போல தமிழ்த்; தரப்பினரைப் பயன்படுத்திக்கொண்டு பின்னர் அவர்களைத் தூக்கி எறிந்துவிட்டுச் செல்கின்ற போக்கையே வரலாறு பாடமாகத் தமிழ் மக்களுக்குக் கற்றுக்கொடுத்துள்ளது.
எனவே வரலாற்றுப் பாடங்களைக் கருத்திற்கொண்டு, பேரின அரசியல் கட்சிகளுடன் செயற்படும்போது, மிகுந்த அவதானத்துடனும், இராஜதந்திரத்துடனும் செயற்பட வேண்டிய நிர்ப்பந்தம் தமிழ் அரசியல் தலைமைகளுக்கு ஏற்பட்டிருக்கின்றது. ஆனால், அந்த அரசியல் யதார்த்தத்தைக் கவனத்திற்கொண்டு கூட்டமைப்பின் தலைமை அரசியலில் காய் நகர்த்தலை மேற்கொள்ளவில்லை என்ற மனக்குறை பலரிடமும் காணப்படுகின்றது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை மீது குற்றச்சாட்டுக்களாக முன்வைக்கின்ற அளவுக்கு சில தரப்பினரிடம் இந்த மனக்குறை மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மீது முழுமையாக நம்பிக்கை இழக்கும் அளவுக்கு சில தரப்பினர் மத்தியில் இந்த மனக்குறை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ம:Pது அளப்பரிய நம்பிக்கை வைத்திருந்த தமிழ் மக்கள் கூட்டமைப்பின் தலைவர்களை தங்களுடைய பிரச்சினைகளுக்கு முடிவுகாண்பதற்கான அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காகவே தேர்தல்களில் தெரிவு செய்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்து;ளளார்கள். ஆனால் நாடாளுமன்றத்திற்குச் சென்றுள்ள அந்தத் தலைவர்கள், தங்களைத் தெரிவு செய்த மக்களை மறந்து அல்லது அவர்களின் நலன்களை முதன்மைப்படுத்தாத முறையில் செயற்பட்டிருப்பதாகக் குற்றம் சுமத்தியிருக்கின்றார்கள்.
அரசியல் நெருக்கடியின்போது, ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாகத் தெரிவித்து, நாட்டின் எதிர்க்கட்சி என்ற வகையில், முதன்மை நிலையில் நீதிமன்றத்தை நாடிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் அவர்களுடைய நலன்களைப் பேணிப்பாதுகாப்பதற்கும் முதன்மை நிலையில் ஏன் செயற்படவில்லை என்ற கேள்வி சாதாரண மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்றது.
பாதிக்கப்பட்ட மக்களாகிய தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக நாடாளுமன்றப் பிரவேசத்தின் மூலம் அரசியல் வெளியில் செயற்படுகின்ற கூட்டமைப்பினர், எத்தகைய அரசியல் சூழலிலும், மிதப்பிலேயே கண்வைத்திருக்கின்ற மீன்பிடிப்பவனைப் போல, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான வழி முறைகளில் மிகுந்த கவனமாகச் செயற்பட்டிருக்க வேண்டும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.
அரசியல் நெருக்கடியின்போது, எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் சர்வதேச நாடுகளின் தூதகர்களையும் இராஜதந்திரிகளையும் சந்தித்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் ஏனையோரும், சர்வதேசத்தின் ஆலோசனை அல்லது வழிகாட்டலுக்கு அமைவாகத்தானே 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு உடன்பட்டு, புதிய அரசாங்கத்தை உருவாக்கியிருந்தோம் என்பதைச் சுட்டிக்காட்டி, அந்த அரசு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக பிரச்ச்pனைகளை பல்கிப் பெருகச் செய்து தங்களை இப்போது நட்டாற்றில் அம்போ என்று கைவிட்டுள்ளதே என்று ஏன் எடுத்துரைக்கவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அது மட்டுமல்ல. நல்லாட்சி அரசாங்கத்தைப் பேணிப் பாதுகாத்திருந்த போதிலும், நாட்டில் மோசமான நெருக்கடிகளை உருவாக்கி அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கையை எடுப்பது என்பது தெரியாமல் அல்லாடச் செய்துள்ள நிலையில் தமிழ் மக்களுக்கு சர்வதேசம் என்ன பதிலைக் கூறப் போகின்றது என்று ஏன் கேள்வி எழுப்பவில்லை என்றும் வினவப்படுகின்றது.
சர்வதேசத்தின் ஆதரவுடன்தான் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்பது கூட்டமைப்பின் அசைக்க முடியாத நிலைப்பாடு.. பிர்ந்திருந்த போதிலும்சரி, நல்லாட்சி அரசாங்கத்தில் இணைந்திருந்த போதிலும்சரி, விடாக்கண்டன் கொடாக்கண்டனாகவே பேரின அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நடந்து கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் அந்த பேரின சக்திகளிடமிருந்து தீர்வைப் பெற்றுக்கொப்பதும், நியாயமான தீர்வை நோக்கி அவர்களை உந்தித்தள்ளிச் செயற்பட வகை;க வேண்டியதும் சர்வதேசத்தின் பொறுப்பு என்பதை சர்வதேச தூதர்கள் மற்றும் இராஜதந்திரிகளுடனான எதிர்க்கட்சித் தலைவரின் சந்திப்பின் போது ஏன் அழுத்தி உரைக்கவில்லை. கிடைப்பதற்கரிய அந்தச் சந்தர்ப்பத்தில் மக்களின் நலன்களை முன்னிறுத்தி சமயோசிதமாகவும் தந்திரோபாயமாகவும் சர்வதேசத்தை பிடிக்குள் என் இறுகச் செய்ய முடியாமல் போனது என்ற கோள்வியும் மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்றது.
நெருக்கடியான அரசியல் சூழல்தான். இல்லையென்று சொல்வதற்கில்லை. தமிழ் மக்களின் நிலைமை அதிலும்பார்க்க மோசமான நெருக்கடியை நோக்கி வலிந்து இழுத்துச் செல்லப்படுகின்றது. இந்த நிலையில் தமிழ்த்தலைவர்கள் என்ன செய்யப் போகின்றார்கள்? அவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap