ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் பணிகளில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் ஆதிக்கம் காணப்படுகிறது என்ற கருத்தில், எதுவித உண்மையுமில்லையென, ஐ.தே.கவின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக வலையமைப்புகளில் அண்மையில் பிரபலமாகியிருந்த காணொளியொன்றில், பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்த ரணில் விக்கிரமசிங்கவுக்கு அருகில் நின்று, நாடாளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த கிரியெல்லவை, தனது இருக்கையிலிருந்து வேகமாக நடந்து சென்ற சுமந்திரன், திட்டுவது போன்று காணப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஐ.தே.கவின் தலைவர் யாரென்ற கேள்வி, மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரால் எழுப்பப்பட்டது.
இது தொடர்பாகக் கேட்கப்பட்ட போது பதிலளித்த கிரியெல்ல, இலத்திரனியல் முறையில் வாக்களிப்பு இடம்பெற்ற பின்னர், பெயரின் அடிப்படையில் வாக்கெடுப்பு நடத்துமாறு கேட்க விரும்பியதாகவும், இலத்திரனியல் முறையில், முறைகேடுகள் நடந்தன என ஏனையோர் குற்றஞ்சாட்ட முடியுமென்பதாலேயே அவ்வாறு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமது கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கையின் பேரிலேயே அவ்வாறு செயற்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், “ஆனால் சுமந்திரன், தன்னை நோக்கி விரைவாக வந்து, வேறு விதமாகச் செய்யுமாறு கூறினார். பெயர்கள், ஏற்கெனவே அங்கு காட்சிப்படுத்தப்படுகின்றன எனவும் அவர் கூறினார்” என்று தெரிவித்ததோடு, தமது கட்சியின் அரசியல் பணிகளில், சுமந்திரன் ஆதிக்கம் செலுத்துவதில்லை என உறுதியளித்தார்.