அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ள கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி சென்னை வருகைதரவுள்ளதாக திராவிட முன்னேற்றக் கழகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஓகஸ்ட் மாதம் காலமான கருணாநிதிக்கு தி.மு.க. தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் உருவ சிலை அமைக்கப்பட உள்ளது. அத்துடன் தி.மு.க. நிறுவனர் அண்ணாவுக்கும் புதிய சிலை அமைக்கப்பட உள்ளது.
அண்ணா-கருணாநிதி ஆகியோரின் சிலைகள் திறப்பு விழா எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி நடைபெற உள்ளது. இந்த விழாவை தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் விழாவாக மாற்ற ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
பாஜகவுக்கு எதிராக அரசியல் களத்தில் உள்ள காங்கிரஸ் மற்றும் அனைத்து மாநில கட்சிகளையும் கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு அழைப்பதற்கு மு.க. ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் தி.மு.க. மூத்த தலைவர்களை பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறார்.
இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ள கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி சென்னைக்கு வருகிறார். கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள வருமாறு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் விடுத்த அழைப்பை அவர் ஏற்றுக் கொண்டுள்ளதாக திமுக கூறியுள்ளது.