நாடு முழுவதிலும் இருந்து டெல்லியில் திரண்டுள்ள விவசாயிகள் தொடர்ந்து இன்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும், விவசாய விளை பொருட்களுக்கு நியாயமான விலை வழங்க வேண்டும், 60 வயது விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய விவசாயிகளின் ஒருங்கிணைப்பு குழு டெல்லியில் நேற்று முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த போராட்ட குழுவில் திருச்சியை சேர்ந்த தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான 1,300 பேர் தமிழகத்தில் இருந்து பங்கேற்று உள்ளனர். அதேபோன்று உத்தரப்பிரதேசம், பீகார், இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட 29 மாநில விவசாயிகளும், 4 யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 207 விவசாய சங்கத்தை சேர்ந்த விவசாயிகளும் என மொத்தம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று உள்ளனர்.
நேற்று இவர்கள் டெல்லியில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் மத்திய அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ள அவர்கள் இன்று டெல்லி பாராளுமன்றத்தை நோக்கி பேரணி செல்லப் போவதாக அறிவித்தனர்.
அந்தவகையில் லட்சக்கணக்கான திரண்டுள்ள விவசாயிகள் பேரணி மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து பேரணி இடம்பெறும் இடத்தில் ஆயிரக்கணக்கான டெல்லி காவல்துறையினர் மற்றும் மத்திய ராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது