உக்ரைன் நாட்டு கப்பல்களை ரஸ்யா கைப்பற்றிய பிரச்சனையை மையப்படுத்தி ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனான சந்திப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ரத்து செய்துள்ளார் . உக்ரைனின் கிரிமியா பகுதியை கடந்த 2014-ல் ரஸ்யா தன்னுடன் இணைத்ததில் இருந்து இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவி வருகின்ற நிலையில் அண்மையில் கிரிமியா அருகே உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 கடற்படை கப்பல்களை ரஸ்ய ராணுவம் கைப்பற்றியதில் இருந்து மீண்டும் போர் பதற்றம் உருவாகி உள்ளது.
இந்த விவகாரத்தில் ரஸ்யாவுக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன் உக்ரைனுக்கு அதிக ஆதரவு வழங்குமாறு ஐரோப்பிய நாடுகளை வலியுறுத்தி உள்ளது. இந்தநிலையில் அர்ஜென்டினாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் புட்டினை டிரம்ப் சந்திப்பது உறுதி என ரஸ்ய ஜனாதிபதியின் கிரெம்ளின் மாளிகை அறிவித்திருந்த நிலையில் இந்த சந்திப்பை டிரம்ப் தற்போது ரத்து செய்துள்ளார்.
ரஸ்யாவால் சிறைபிடிக்கப்பட்ட கப்பல்களும், மாலுமிகளும் இன்னும் உக்ரைனுக்கு திரும்பிவராத நிலையில் புட்டினுடான சந்திப்பை ரத்து செய்ய தீர்மானித்துள்ளேன் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்