அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரஸ்யா தலையிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பாராளுமன்ற விசாரணையில் தாம் பொய் சொன்னதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் ( Michael Cohen) ஒப்புக்கொண்டுள்ளார்.
மொஸ்கோவில் உள்ள டிரம்பின் ரியல் எஸ்டேட் திட்டம் ஒன்று குறித்து பாhளுமன்ற உறுப்பினர்களை தவறாக வழிநடத்தியதாக ஒப்புக்கொண்ட அவர் ஜனாதிபதி டிரம்பின் மீதுள்ள விசுவாசத்தால் இவ்வாறு செய்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். மான்ஹாட்டனில் உள்ள பெடரல் நீதிமன்றம் ஒன்றில் நேற்று வியாழக்கிழமை எதிர்பாராத வகையில் முன்னிலையான கோஹன் இவ்வாறு தான் பொய் கூறியதனை ஒப்புக் கொண்டுள்ளார்.
இதைப்போலவே, 2016 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் அப்போதைய ஜனநாயகக் கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்புடன் பாலியல் உறவில் இருந்ததாக கூறப்பட்ட பெண்களை சமாதானப்படுத்துவதற்காக ரகசியமாக பணம் தந்த விவகாரத்தில் தாம் ஈடுபட்டதாகவும் அதன் மூலம் நிதி தொடர்பான சட்டங்களை மீறிவிட்டதாகவும் கடந்த ஓகஸ்ட் மாதமளவில் கோஹன் ஒப்புக்கொண்டிருந்தார்.
அமெரிக்க தேர்தலில் ரஸ்யா தலையிட்டு டிரம்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் டிரம்போ, அவரது உள்வட்டாரமோ ரஸ்யாவுடன் ரகசியமாக சேர்ந்து செயல்பட்டார்களா என்பது பற்றி அமெரிக்க நீதித்துறையின் சிறப்பு வழக்குரைஞர் நடத்தி வரும் விசாரணையில் நேற்றையதினம் கோஹன் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது