குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பொது மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக மன்னார் தனியார் பேருந்து தரிப்பிடம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் நகர மத்தியில் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையமானது பகுதி பகுதியாக கடைகள் அகற்றப்பட்டு பேரூந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடை பெற்று வந்தது. தற்போது பேருந்து நிலையத்தின் முழுப்பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் அகற்றப்பட்டு வேலைகள் வேகமாக நடை பெற்று வருகின்றது.
எனினும் மக்கள் நடமாடுவதற்கும் தனியார் பேருந்துகள் நிறுத்தி வைப்பதற்கும், பேரூந்துகள், நிறுத்தி வைக்கப்பட்டு மக்கள் இலகுவாக பயணங்களை மேற்கொள்ள முடியாத நிலை காணப்பட்டது.
மக்களின் இந்த பயண அசௌகரியங்களை நிவர்த்தி செய்வதற்காக மன்னார் நகர சபையால் மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் தனியார் பேருந்துகள் தரிப்பிடத்திற்காக தற்காலிகமாக இடம் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது என மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரன் டேவிடசன் தெரிவித்தார்.
குறித்த இடமானது பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கான வேலைகள் நிறைவு பெறும் வரை தற்காலிகமாகவே வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்