மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. காவல்துறை சார்ஜன்ட் ஆக குறித்த இரண்டு காவல்துறையினருக்கும் பதவி உயர்வு வழங்க காவல்துறை மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் மற்றும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர ஆகியோர் நேற்று மட்டக்களப்புக்குச் சென்றிருந்தனர்.
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட காவல்துறை குழுவொன்று மட்டக்களப்புக்கு அனுப்பப்பட்டிருந்தது. வவுணதீவு, வலையிறவு பாலத்திற்கு அருகில் உள்ள காவல்துறை சோதனைச் சாவடியில் இரவு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இரு காவல்துறை உத்தியோகத்தர்கள் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் நேற்றுஅதிகாலை சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.
இந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த வவுணதீவு காவல் நிலையத்தில் கடமையாற்றும் பிரசன்ன, தினேஸ் என்னும் இரண்டு காவல்துறை கான்ஸ்டபிள்களுக்கே இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.