குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னார் சாந்திபுரம் கிராமம் ஊடாக இலங்கை மின்சார சபையினால் அதி உயர் மின் கம்பங்கள் நாட்டப்படுவதற்காக அக்கிராம வீடுகளில் உள்ள தென்னை மரங்களை இன்று சனிக்கிழமை (1) காலை முதல் வெட்டுவதற்கு இலங்கை மின்சார சபை பணியாளர்கள் நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், மக்களின் எதிர்ப்பை அடுத்து கைவிடப்பட்டுள்ளது
-எனினும் குறித்த கிராமத்தில் உள்ள சில வீடுகளின் வீட்டு முற்றத்தில் காணப்பட்ட தென்னை மரங்கள் சிலவற்றை அங்கு சென்ற இலங்கை மின்சார சபையின் பணியாளர்கள் பலவந்தமாக வெட்டியுள்ளதாகவும் அக்கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,,
வட பிராந்திய (யாழ்ப்பாணம்) மின்சார சபையினால் மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சாந்திபுரம் கிராமத்தின் ஊடாக அதி உயர் மின்கம்பம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டிருந்தது.
எனவே அப்பகுதியில் வீட்டு வளாகத்தினுள் காணப்படுகின்ற பயன் தருகின்ற தென்னை மரங்கள் அனைத்தையும் வெட்ட வேண்டும் என்று மின்சார சபை பொறியியலாளரினால் இக்கிராம மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.
மேலும் 7 தினங்களுக்குள் வீட்டின் உரிமையாளர்கள் தென்னை மரங்களை வெட்டி அகற்றாது விட்டால் இலங்கை மின்சார சபை பணியாளர்கள் அதனை அகற்றுவார்கள் என தெரிவித்திருந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக உடனடியாக சாந்திபுரம் கிராம மக்கள் மன்னார் பிரதேசச் செயலாளர் மற்றும் மன்னார் நகர சபையின் தலைவர் ஆகியோருக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தோம்.
இந்த நிலையில்,இன்று சனிக்கிழமை காலை முதல் இலங்கை மின்சார சபையின் பணியாளர்கள் சாந்திபுரம் கிராமத்திற்கு சென்று சில வீடுகளில் பலவந்தமான தென்னை மரங்களை வெட்டியுள்ளதோடு,மேலும் பல வீடுகளில் உள்ள தென்னை மரங்களை வெட்ட முயன்றனர்.
எனினும் கிராம மக்களின் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் அவர்கள் தென்னை மரங்களை வெட்டாது அங்கிருந்து சென்றதாக அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த கிராம மக்களின் வீடுகளில் காணப்படுகின்ற தென்னை மரங்களினால் அதன் உரிமையாளர்கள் வருமானத்தை பெற்றுக்கொள்ளுவதாகவும், குறித்த நடவடிக்கைகளை ஒரு போதும் தாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என சாந்தி புரம் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே இதற்கு மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள மன்னார் பிரதேசச் செயலாளர் மற்றும் மன்னார் நகர சபையின் தவிசாளர் ஆகியோர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.என சாந்திபுரம் கிராம மக்கள் மேலும் தெரிவித்தனர்.