Home இலங்கை இரணைமடு அதன் பயன்பாட்டு எல்லையை விஸ்தரிக்குமா? மு.தமிழ்செல்வன்

இரணைமடு அதன் பயன்பாட்டு எல்லையை விஸ்தரிக்குமா? மு.தமிழ்செல்வன்

by admin
இரண்டு வருடங்களின் பின் இரணைமடு முழுமையாக நிரம்பியிருக்கும் காட்சியினை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்றார் கிளிநொச்சியின் மூத்த விவசாயி ஒருவர் அவர் மட்டுமல்ல விவசாயத்துறைக்கு வெளியால் உள்ள பலரும்  இரணைமடுவை பார்த்து பூரிப்படைகின்றனர். இரணைமடுவின் கீழ் நேரடியாக பயன்பெறுகின்றவர்கள் முதல் எந்தப் பயனையும் பெறாதவர்கள் என கிளிநொச்சியில் அனைவரும் இரணைமடுவை தங்களின் ஒரு பொக்கிசமாக நோக்குகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் அமைந்துள்ள இரணைமடுகுளத்திற்கு வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களிலிருந்து பிரதானமாக கனகராயன் ஆற்றின் ஊடாக நீர் வருகிறது. ஆனால் இரணைமடுகுளத்தின் நீர்பாசனத்திணைக்கள நிர்வாகம் மற்றும் அதன் பாசன பயன்பாடு என்பது முற்றமுழுதாக கிளிநொச்சி மாவட்டத்திற்குரியதாக காணப்படுகிறது.

வடக்கு மாகாணத்தில் மிகப்பெரிய குளமாகவும் இலங்கைத்தீவில் ஏழாவது குளமாகவும் காணப்படுகின்ற இரணைமடு குளத்தின் வரலாறு 1885 இல் ஆரம்பிக்கிறது. இதனை தவிர இரணைமடு பிரதேசம் இற்கைக்கு  மூவாயிரம் ஆண்டுகள் தொன்மைமிக்க பிரதேசம் எனவும் தொல்லியலாளர்களும் குறிப்பிடுகின்றனர்.

ஆங்கிலேயே ஆட்சிக்காலத்தில் இரணைமடு படுகையில் கனடா- பிரிட்டிஷ் அதிகாரியான சேர்ஹென்றிபாட் 1885ல் அப்போதைய பிரிட்டிஷ் அரச அதிபர் டேக்கிற்கு இரணைமடு நீர்த்தேக்கத்தை அமைக்கும் ஆலோசனையை முன் வைத்தார்.1866ல் பிரிட்டிஸ் நீர்ப்பாசன பொறியிலாளரும் தொல்பொருள் தேடலாளருமான ஹென்றி பாக்கர் இரணைமடு நீர்த்தேக்கத்துக்கான திட்டத்தை வரைந்தார். அவரின் திட்டத்தில் இரணைமடுவின்கீழ் 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கையை மேற்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. 1900ல் பிரிட்டிஸ்  நீர்ப்பாசன பொறியிலாளர் று.பிரௌன் வரும்வரை இரணைமடு கட்டுமானம் வரைவு மட்டத்திலேயே இருந்தது. பொறியிலாளர் பிரௌன் அப்பொதிருந்த கரைச்சிப் பகுதியில் வாழ்ந்த வெற்றிவேலு என்பவரைச் சந்தித்து இரணைமடு படுகை காட்டை முழுமையாக ஆராய்ந்தார்.

 1902இல் தொடங்கி 1922இல் கட்டி முடிக்கப்பட்ட இந்த நீர்த்தேக்கம் அன்று பிரிட்டிஷ் ஆட்சியில் இலங்கை அரசியலில் செல்வாக்காக இருந்த சேர். பொன். இராமநாதனின் பரிந்துரையில் அவருடைய 1000 ஏக்கர் நிலத்தில் மேற்கொள்ளப்பட்ட நெற்பயிர்ச் செய்கைக்காகக் கட்டப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. அப்போது குளம் 24 அடி ஆழமாகவும் 40 ஆயிரம் ஏக்கர் அடி கொள்லளவாகவும் காணப்பட்டது  இந்த நீர்த்தேக்கத்தைக் கட்டும் பணியில் இந்தியாவில் இருந்து வருவிக்கப்பட்ட தொழிலாளர்களே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். என இரணைமடு பற்றிய வரலாற்றுக் குறிப்புக்களோடு யாழ் பல்கலைகழகத்தின் பொறியில் துறை  விரிவுரையாளர் சுப்பிரமணியம் சிவகுமார் அவர்களின் இரணைமடு பற்றிய கட்டுரை ஒன்றிலும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

1922 ல் 19 லட்சத்து 4 ஆயிரம் ரூபா செலவில் இரணைமடு முதல் கட்டமாக முழுமையாக்கப்பட்டது. அப்போது இரணைமடுவின் கொள்ளளவு 44 ஆயிரம் ஏக்கர் அடி, ஆழம் 22 அடி.  1948 -1951ல் இரண்டாம் கட்டக் கொள்ளளவு அதிகரிப்பு நடைபெற்றது. அப்போது கொள்ளளவு 82 ஆயிரம்400 ஏக்கர் அடியாகும். இதன்மூலம் குளத்தின் நீர்மட்ட ஆழம் 30 அடியாக உயர்த்தப்பட்டது. பின்னர்  1954 -1956  மூன்றாம் கட்ட பணியின் போது குளத்தின் ஆழம் 32 அடியாகவும் கொள்லளவு   93500 ஏக்கராவும் காணப்பட்டது

4 ஆம் கட்டமாக கொள்ளளவு அதிகரிப்பு 1975- 1977 இடம்பெற்றது அக்கொள்ளளவு அதிகரிப்பின்போது இரணைமடுவின் கொள்ளளவு 1 லட்சத்து 6500 ஏக்கார் அடியாக அதிகமானது. ஆழம் 34 அடியாகும். பின்னர் இறுதியாக கடந்த 2013 -2017ஆம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2000             மில்லியன் ரூபா நிதி உதவியுடன் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கும் வரைக்கும் இரணைமடுகுளத்தின் நீர் கொள்ளளவு  இதுவாகவே காணப்பட்டது.

ஆனால் அபிவிருத்தியின் பின்னர் பின் 36 அடியாக ஆழம் அதிகரிக்கப்பட்டு அதன் கொள்ளளவு ஒரு  இலட்சத்து 19500 ஏக்கர் அடியாக(147 எம்சிஎம்)  அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரணைமடுகுளத்தின் கீழ் சராசரி 8500 ஏக்கரில் மேற்கொள்ள்ப்பட்டு வந்த  சிறுபோக நெற்செய்கை 12500 ஏக்கராக  மாற்றப்படும் என கிளிநொச்சி பிராந்திய பிரதி நீர்ப்பாசனத்திணைக்கள பிரதிப் பணிப்பாளர் எந்திரி ந. சுதாகரன் தெரிவித்தார்.

இரணைமடுவும் குடியேற்றமும்

1902 – 1920 இரணைமடு புனரமைப்பு பணிகளில் ஈடுப்பட்ட தொழிலாளர்களுக்கு மருதநகர் கிராமத்தில் காணிகள் வழங்கப்பட்டு குடியேற்றப்பட்டார்கள். இதன் பின்னர் 1934 ஆம் ஆண்டு மகிழங்காடு பன்னங்கண்டி காணிகள் மத்திய வகுப்புத்திட்டத்தின் கீழ்  பத்து ஏக்கர் வீதம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து 1935 இல் கணேசபுரம் கிராமத்தில்72 காணிகள் ஐந்து ஏக்கர் வீதமும்இ 1950 ஆம் ஆண்டு உருத்திரபுரம் டி10 குடியேற்றமும்,1951 இல் உருத்திரபுரம் டி8 குடியேற்றமும் நான்கு ஏக்கர் காணிகள் வழங்கப்பட்டது. மேலும் 1953 ல் வட்டக்கச்சியில் குடியேற்றத்திட்டமும்,1954 இல் முரசுமோட்டை குடியேற்ற திட்டத்தில் மூன்று ஏக்கர் வீதம்183 காணிகளும், ஊரியானில்  மூன்று ஏக்கர் வீதமும் இரணைமடுவை அடிப்படையாக கொண்டு குடியேற்றப்பட்டன. இந்தக் குடியேற்றக் காலப்பகுதிகள் அனைத்தும்  இரணைமடுகுளத்தின் நீர் கொள்லளவு அதிகரிக்கப்பட்ட காலமாகும்

இரணைமடும் விவசாயமும்

இதனைத்தவிர 2012 தொடக்கம் குளத்தின் கீழான வாய்க்கால்இ வீதிகள் நெற்களஞ்சியங்கள்இ கிணறுகள் என விவசாய உட்கட்டுமானப் பணிகள்  சர்வதேச விவசாய அபிவருத்திக்கான நிதியம் (IFAD) 3250 மில்லியன் ரூபாக்கள் இலகு கடன் மூலம் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. எனவும் சுதாகரன் மேலும் தெரிவித்தார்.

இரணைமடுகுளத்தின கீழ் விவசாய நடவடிக்கையாக நெற்செய்கை மாத்திரமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்திலுள்ள 24935 விவசாயக்குடும்பங்களில் 7000விவசாயக்குடும்பங்கள்இரணைமடுநீர்ப்பாசனத்திட்டத்தின்கீழ்விவசாயத்தைமேற்கொள்வோராகக்காணப்படுகின்றனர். இதுமாவட்டத்தின்மொத்தவிவசாயக்குடும்பங்களின்எண்ணிக்கையில் 35வீதமாகும் இதனைத்தவிர 408 மில்லின்கள் ரூபா நிதி செலவில் இரணைமடுவின் கீழ் திருவையாறு பிரதேசத்திற்கான ஏற்று நீர்ப்பாசனம் மீள்புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளது. இங்கு விசேடசம்சமாக சூரிய மின்சக்தியில் இயங்கும் வகையில் எந்த ஏற்று நீர்ப்பாசனத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளமை முக்கியமானது.

1976 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட திருவையாறு ஏற்று நீர்ப்பாசனம் 1986 இல் கைவிடப்படும் போது 1409 ஏக்கரில் 533 குடும்பங்கள் பயன்பெற்றன. ஆனால் தற்போது இந்த நிலைமை அங்கில்லை. விவசாய குடும்பங்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதோடுஇ விவசாய நிலப்பரப்பும் வெகுவாக குறைந்திருக்கிறது. ஏற்று நீர்ப்பாசனத்தின் கீழ் விவசாய காணிகளாக இருந்த பல காணிகள் வான் பயிர்கள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் பல காணிகள் பிரிக்கப்பட்டு குடியிருப்பு நிலங்களாக காணப்படுகின்றன. எனவே இந்த நிலையில் தற்போது இரணைமடுவை பொறுத்தவரை அது முழுக்க முழுக்க நெற்பயிர்ச்செய்கைக்குரிய குளமாகவே காணப்படுகிறது. விவசாயிகளும் பாரம்பரியமாக மேற்கொண்டு வந்த நெற்செய்கை நடவடிக்கைகளிலிருந்து மாற்றுபயிர்ச்செய்கைக்கு செல்வதற்குரிய மனநிலை மாற்றத்திற்கு தயாராகவும் இல்லை.

நெற்செய்கையை கைவிடாது அதேநேரம் குறைந்தளவு நீர் பயன்பாட்டில் அதிக இலாபத்தை தரக்கூடிய உப உணவு உற்பத்திகளில் பயறு, கௌப்பி, உழுந்து,  சோளம், நிலக்கடலை போன்ற  மாற்ற பயிர்ச்செய்கைக்கு செல்வதற்கு  இரணைமடுவுக்கு கீழான விவசாயிகள் தயாராக இல்லை. விரிவுரையாளர் சுப்பிரமணியம் சிவகுமார் அவர்கள் குறிப்பிடும் போது ஒரு ஏக்கர் நெற்செய்கைக்கு 9 ஏக்கர் அடி நீர்த் தேவை என்றும்  ஆனால் நீர் முகாமைத்துவத்தின் படி சிக்கனமாக பயன்படுத்தினால் நான்கு அடி நீர் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கின்றார். எனவே இவரின் கருத்துப் படி இரணைமடுவின் கீழ்  நெற்செய்கைக்காக நீர் சிக்கனமாக பயன்படுத்தப்படவில்லை என்ற முடிவுக்கு வர முடிகிறது.

அத்தோடு இரணைமடுவின் கீழ் 7000 விவசாய குடும்பங்கள் பயன்பெறுவதாக புள்ளி விபரங்கள் மூலம்  தெரிவிக்கப்பட்டிருப்பினும் சில நூறு விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளுக்கு சொந்தக்காரர்களாகவும் அவற்றில்  நெற்பயிர்ச்செய்கையில் ஈடுப்பட்டு வருகின்றவர்களாவும் காணப்படுகின்றனர் இதன் மூலம் இரணைமடுவின் நன்மையை அனுபவிக்கின்றவர்கள் ஒரு வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையானவர்களாகவே காணப்படுகின்றனர்.

இதேவேளை இரணைமடுவின் மேற்கு பிரதேசத்தில் உள்ள கிராமங்களில் குறிப்பாக ஏ9 வீதியின் மேற்கு புற கிராம மக்கள் தங்களின் விவசாய நடவடிக்கைகளுக்கு ஏற்று நீர்ப்பாசனத்திட்ட வசதிகளை ஏற்படுத்தி தருமாறு கோரி வருகின்றனர் ஆனால் அதற்கான எந்த திட்ட வரைபுகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

இரணைமடுவும் குடிநீரும்

கிளிநொச்சி யாழ்ப்பாணம் குடிநீர்  விநியோகமாக ஆரம்பிக்கப்பட்ட இரணைமடு அபிவிருத்தி பின்னர் தனியே இரணைமடு அபிவிருத்தி திட்டமாக மாற்றப்பட்டது. கிளிநொச்சி விவசாயிகள் தங்களின் விவசாய நடவடிக்கை பாதிக்கப்பட்டு விடும் என்ற அச்சம் காரணமாக வெளிப்படுத்திய எதிர்ப்பு மற்றும் அரசியல் காரணங்களுக்காக  கிளிநொச்சி யாழ்ப்பாணம் குடிநீர் திட்டம் கைவிடப்பட்டது.

தற்போது  இரணைமடுவிலிருந்து  கிளிநொச்சிக்கான குடிநீர் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இரணைமடு குளத்திலிருந்து கிளிநொச்சி குளத்திற்கு நீர் பெறப்பட்டு அங்கிருந்து கிளிநொச்சி நகரையும் நகரை அண்டிய மிக சிறிய எண்ணிக்கையான கிராமங்களுக்கும் குடிநீர் விநியோகம்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறே பரந்தன் பூநகரி பிரதேசங்களிலும் குடிநீர் விநியோகத்திற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளன.

ஆனால் கிளிநொச்சி மாவட்டத்தில் இன்னும் ஏராளமான கிராமங்கள் வருடத்தின் பெரும்பகுதி நாட்களில் குடிநீருக்காக பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். மிக முக்கியமாக இரணைமடுகுளத்தின் அலைகரையோரமாக உள்ள சாந்தபுரம் கிராமம் வருடந்தோறும் குடிநீருக்கு போராடுகின்ற  கிராமமாக காணப்பட்டு வருகிறது. அவ்வாறே கிளிநொச்சியின் மேற்குபுற கிராமங்களும் பூநகரிஇ கண்டாவளை பளை பிரதேசங்களில் பல கிராமங்களும் குடிநீர் பிரச்சினைக்குரிய கிராமங்களாக காணப்படுகின்றன. இரணைமடுவை மையமாக கொண்டு குடிநீர் விநியோகம் திட்டம் சில பிரதேசங்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதும் குளத்திற்கு அருகில் உள்ள பல கிராமங்கள் இன்னமும் குடிநீருக்காக காத்திருக்கின்றன.

இரணைமடுவும் கிளிநொச்சியின் பொருளாதாரமும்
 கிளிநொச்சியின் பொருளாதாரத்தில் இரணைமடு தவிர்க்க முடியாத ஒன்று ஒரு காலத்தில் இரணைமடுவில் நீர் நிரம்பி அதன் கீழ் நெற்செய்கை முழுமையாக மேற்கொள்ளப்படுகின்றபோது நேரடியாகவும், மறைமுகமாகவும் பொருளாதார நன்மைகளை பெற்றவர்கள் ஏராளம் களையெடுத்தல், அறுவடை செய்தல், தொடக்கம் அறுவடைக்கு பின்னரான நடவடிக்கைகள் என  தொடரும்.  இதற்கிடையே அறுவடைக்கு பின்னர் வயல் நிலங்களில் சிந்திய நெற்கதிர்களை பொறுக்கியெடுத்து  வாழ்ந்த குடும்பங்கள் பல. ஆனால் இன்று இயந்திர சாதனங்களின் பயன்பாடு காரணமாக  தொழில் வாய்ப்புகள் தொடக்கம் பல பொருளாதார நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இரணைமடுவின் பொருளாதார நன்மைகள் முன்னரை போன்றன்று சுருங்கிவிட்டதாகவே உள்ளது.
குளம் என்பது தனியே விவசாயத்திற்குரியது மட்டுமல்ல ஆனால் குளத்தின் தேவைகளில் விவசாயம் முதன்மை பெறுகிறது. இரணைமடு குளத்தை நம்பி சில நூறு வரையான நன்னீர் மீன் பிடிப்பாளர்கள் உள்ளனர்  ஆனால் அவர்கள் பொருட்டு பெருமளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை.  குளத்தின் அபிவிருத்தியின் போது பாதிக்கப்பட்ட விவசாயிகளின் மீது செலுத்தப்பட்ட கவனம் தங்கள் மீது செலுத்தப்படவில்லை என்ற கவலை இன்றும் அவர்களிடம் உண்டும். எனவே பாரிய நீர்ப்பாசனக் குளமான இரணைமடு பல வழிகளில் அதன் பயன்பாட்டு எல்லைப் பரப்பை விரிவுப்படுத்த வேண்டும்
   

Spread the love
 
 
      

Related News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More