கஜா புயல் பாதிப்புக்கு இடைக்கால நிவாரணமாக 353.70 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்வதற்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். கஜா புயல் நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை தாக்கியதில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபா வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்தது. அதுதவிர, சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் மரங்களும், 1 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளும் சேதம் அடைந்துள்ளதனால் டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, புயல் பாதிப்பு நிவாரண நிதியாக 15,000 கோடி ரூபாயும், தற்காலிகமாக 1,500 கோடி ரூபாயும் ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்தக் கோரிக்கையைத் தொடர்ந்து முதற்கட்டமாக மத்திய அரசு கடந்த ஞாயிறு அன்று 200 கோடி ரூபா வழங்கியது. இந்த நிலையில் இரண்டாவது தவணையாக, இடைக்கால நிவாரணமாக மத்திய அரசு 353.70 கோடி ரூபா ஒதுக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது