உக்ரைன் நாட்டின் பிரச்சனையை தீர்ப்பத்தில் அக்கறை காட்டாத ஆட்சியாளர்கள் பதவியில் இருக்கும்வரை போர் தொடரும் என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான கிரிமியா பகுதியை கடந்த 2014-ல் ரஸ்யா தன்னுடன் இணைத்ததில் இருந்து இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்தநிலையில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 கடற்படை கப்பல்களை அண்மையில் கிரிமியா அருகே ரஸ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி கைப்பற்றியதில் இருந்து இருநாடுகளுக்கு இடையே மீண்டும் போர் பதற்றம் உருவாகி உள்ளது. இந்தப் பதற்றத்தினை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் ரஸ்யாவை சேர்ந்த 16-60 வயதுக்குட்பட்ட ஆண்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைய உக்ரைன் அரசு தடை விதித்துள்ளது. உக்ரைனின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பதிலடியாக இதேபோன்ற தடையை விதிக்கும் எண்ணம் ஏதுமில்லை என ரஸ்யா தெரிவித்திருந்தது.
இந்நிலையில், உக்ரைன் நாட்டின் பிரச்சனையை தீர்ப்பத்தில் அக்கறை காட்டாத ஆட்சியாளர்கள் பதவியில் இருக்கும்வரை போர் தொடரும் என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டடின் தற்போது திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அர்ஜென்டினாவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போதே புட்டின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.