Home இலங்கை சுழி நல்லா இருந்தால் ஒண்டும் தேவை இல்லை. இருக்கிற ஊரே இனிக்கும்.

சுழி நல்லா இருந்தால் ஒண்டும் தேவை இல்லை. இருக்கிற ஊரே இனிக்கும்.

by admin

சனி முழுக்கு 19 – பொஸிற்றிவ் பொன்னம்பலம்

ஒரு இடைக் காலத்திலை எண்டு நினைக்கிறன்.  காலமை பழஞ்சோத்துக் கஞ்சி. பிறகு போய் எந்த பேக்கரியிலை பாண் போடுறான் எண்டு மணந்து பிடிச்சு அங்கை போய் நிண்டு அவன்தாற கருக்கலை வாங்கி வைச்சிட்டுச் சங்கக்கடைக்குப் போறது அங்கையும் ஏதேன் கிடைக்குமோ எண்டு பாக்க. இப்பிடித்தான் அப்ப சீவியம் கழிஞ்சது. பிறகு  நாளாக நாளாக அப்பிடி இப்பிடி எல்லாம் நடந்து பெடி பெட்டையள் கண்ணுக்குத் தெரியாத இடமெண்டாலும் பறவாயில்லை உயிரோடை போய் இருக்கட்டுமே எண்டு நினைச்சு அதை இதை வித்துச் சுட்டு வெளியாலை அனுப்பிவிட்டிட்டுக் காயிதம் வராதோ எண்டு பாத்து ஏங்கின காலமும் ஒண்டிருக்கு. பிறகு அடிபிடி சண்டை சச்சரவு எண்டு காலம்போய் இடம்பெயர்வோடை எங்கடை எல்லாம் சரியாப் போச்சுது.

பிறகு  சரித்திரம் மாறி விட்டுது. என்ன நடக்க வேணுமோ அது நடக்கேல்லை. எது நடக்கப்பிடாது எண்டு எண்ணினமோ அது நடந்து போச்சுது. அண்டு தொட்ட சீத்துவக் கேடு இண்டைக்கும் கிடந்து உருண்டு புரளிறம். ஒண்டும் நடக்கேல்லை. இத்தனையும் நான் சொல்லக் காரணம் என்னெண்டால், கன விசியம் நெஞ்சுக்கை கிடந்து மேலும் கீழுமாப் பிரளிது. கக்கேலாமலும் கிடக்கு. ஏனெண்டால் எந்தப் புத்துக்கை எந்தப் பாம்பிருக்கோ தெரியாது? ஆனால் கனகாலம் உப்பிடி நாங்கள் இழுபடேலாது, என்ன?

இஞ்சையும் இப்ப வயசு வித்தியாசமில்லாமல் எல்லாரிலையும் ஒழுக்கம் குறைவாக் கிடக்கு. முந்தின மாதிரி மனுச ரை மனுசர் மதிக்கிறதில்லை.  கேட்டால் படிச்ச ஆக்கள் நாங்கள் எண்டு சொல்லினம். தாய், தேப்பன் காட்டிக் குடுத்ததைத்தானே பிள்ளையள் செய்வினம். அவையிலையும் ஒழுக்கம் குறைவாக் கிடக்கு. முந்தி பெரியகடைக்குப் போக பஸ்ஸிலை ஏறினால் எத்தினைபேர் எழும்பி நிண்டு தங்கடை சீற்றைத் தருவினம். இப்ப ஏறினவுடனை சில பேர் அப்பதான் யன்னலுக்காலை வெளியாலை புதினம் பாப்பினம். சிலபேர் அரைக் கண்ணை மூடித் தாங்கள் நித்திரை கொள்ளுறதா நடிப்பு வேறை. அப்ப நாங்களும் அங்காலை இஞ்சாலை கிடக்கிற கம்பியளைப் பிடிச்சுக் கிடிச்சு நிண்டு விழாமல் கொள்ளாமல் போய் வாறம்.

 

இதை ஏன் இப்ப சொல்லுறன் எண்டால் போன கிழமை சுப்பிரமணி தான்  வழமையாப்போற கிளினிக்குக்குப் போனவன். ஆளுக்குச் சலரோகம். கன நேரம் நிக்கேலாது. பஸ்ஸிலை ஏறிவிட்டான். சனமும் கூடவாம். அவன் நிண்டு நிண்டு பாத்தான் தனக்கு ஆரேன் சீற்றுத் தருவினமோ எண்டு. ஒருதரும் ஏன் நாய் எண்டு கேக்கேல்லை. பஸ்காரனும் கொஞ்சம் வீச்சாத்தான் ஓடினவனாம். தட்டாதெருச் சந்தியிலை குறுக்காலை போன ஓட்டோக்காரனுக்கு வெட்டினாப்போலை பஸ் பிறேக்கைப் பிடிக்க பஸ்ஸுக்கை நிண்ட சனம் பின்னாலை உள்ளவை முன்னாலை வர,  முன்னாலை உள்ளவை பின்னாலை போக,  சுப்பிமணி போய் முன்னாலை கிடந்த சீற்றிலை அடிபட்டாப்போலை முன் பல்லெல்லாம் விழுந்து போச்சுது. சுப்பிரமணிக்கு இரண்டு நாளா குலைப்பன். அப்ப சுப்பிரமணி ஒண்டு ஆரிட்டையேன்  சீற்றைக் கேட்டு இருந்திருக்க வேணும். இல்லாட்டிக் கொண்டக்டருட்டைத்  தன்னும் சொல்லியிருக்க வேணும்.இது அரண்டும் இல்லை. இப்ப சுப்பிரமணிக்குப் பல்லும் பிரச்சினை. நாரியிலையும் நோவாம்.

 

அப்ப ஒரு மனுசனுக்குப் பிரச்சினையள் எந்த வளத்தாலை வருமெண்டு தெரியாது. இதை நேற்றைக்கு என்னைத் தேடி வந்த சுப்பிரமணியத்தின்ரை மருமோனுக்குச் சொன்னன்.அவன் வெளிநாட்டிலை இருந்து அவன்ரை மனுசியின்ரை தங்கைக்காரியின்ரை கலியாணத்துக்கு வந்தவன். அவன் படிக்கிற காலத்திலை  கொஞ்ச நாளா வந்து எங்கடை வீட்டிலை இருந்து படிச்சவன். அதாலை அவனுக்கு இன்னும் அந்த ஞாபகம் இருக்கு. ஒருக்கா வந்து எங்களையும் பாத்திட்டுப் போவம் எண்டு வந்தாப் போலை எங்களுக்கும் ஒரு சொக்கிலேட்டுப் பைக்கற்றும், ஒரு பெரிய கோப்பிப் போத்திலும் கொண்டு தந்திட்டுப் போறான். நான் இஞ்சத்தை இட்டிடஞ்சலைச் சொல்ல, அவன் சொல்லுறான் இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை தானண்ணை. நீங்கள் இஞ்சை இருந்து நினைக்கிறியள் ஏதோ நாங்கள் அங்கை பெரிய கப்பல் ஓடுறமெண்டு.ஆனால் அங்கை நாங்கள் வலிக்கிற வலிப்பை ஆர்  காணினம். இஞ்சை வந்து அங்கத்தைக் காசை மாத்தேக்கை நீங்கள் நினைக்கிறது நாங்கள் பணக்காரர் எண்டு. ஆனால் நாங்கள் இஞ்சை இருக்கிற பிச்சைக்காரனைவிட மோசம் அண்ணை. அவனாவது பிச்சை எடுத்துத் திண்டிட்டு கோயில் மண்டபமாப் பாத்து இல்லாட்டி நல்ல மர நிழலாப் பாத்துக் குறட்டைவிட்டு ஒரு கவலையும் இல்லாமல் நித்திரைக் கொண்டு எழும்புவன். ஆனால் நாங்கள் அப்பிடி ஒரிடத்திலை இருந்து மூச்சு விடேலாது. எப்பவும் காரின்ரை கட்டுக்காசு, வீட்டின்ரை கடன் காசு, கிறடிட் காட்டின்ரை காசு அது இது எண்டு மீற்றர் தலையைச்  சுத்தி ஓடுமண்ணை.மணிக்கூடு ஓடுதோ ,  இல்லையோ, கடன்பட்ட காசின்ரை மீற்றர் ஓடும்.

அப்ப நாங்கள் என்ன செய்தாலும் மீற்றர்தான் ஓடும்.புலி வாலைப் பிடிச்ச மாதிரித்தான். எங்கடை நிலமை படு மோசமண்ணை. இதெல்லாத்தையும் செய்து போட்டு வீட்டிலை நின்மதியா இருக்கேலுமோ எண்டு பாத்தால், பல பேற்றை வீட்டிலை இறாட்டலுக்குக் குறைவில்லை. அதை இதைச் சாட்டி சண்டை சச்சரவுதான். அதுவும் இரண்டு பேரும் போத்தில் காரர் எண்டால் சொல்லத் தேவை இல்லை. கண்டபடி வாய்த் தர்க்கமும், அடிபிடியுந்தான். என்ன செய்யிறது தலையிலை ஏத்தி வைச்சாச்சு எண்டு சுமக்கிறம். கேட்டுப்பாருங்கோவன் ஆராவது விருப்பத்தோடை சுமக்கினமோ எண்டு. பலர் ஒரு வீட்டிலை இருப்பினம். ஒரு கதவாலை வந்து போவினம். உள்ளுக்கை பாத்தால் எல்லாம் வேறை வேறையாத்தான் இருக்கும். நின்மதி எண்டது அண்ணை அவனவன் தலை எழுத்துப்படி எண்டதுதான் என்ரை நம்பிக்கை. என்ன படிச்ச ஆளா இருந்தும் வேலை இல்லை. விட்டுக் குடுத்து நடந்தால் எல்லாம் சரியாப்போம் எண்டு நினைச்சால் அங்கையும் பிரச்சினைதான். விட்டுக் குடுக்கக் குடுக்க உருவுதல் கூடுமே ஒழியக் குறையாது. சுழி நல்லா இருந்தால் ஒண்டும் தேவை இல்லை. இருக்கிற ஊரே இனிக்கும். குறைபாடு இருக்கிறவைய ளோடை சீவிக்கிறதும் சந்தோஷமா இருக்கும். இருக்கிறதையும் மனம்  போதும் எண்டும் சொல்லும்.

 – பொஸிற்றிவ் பொன்னம்பலம்

Spread the love
 
 
      

Related News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More