எண்ணெய் வள நாடுகளான அரபு நாடுகளை மையமாகக் கொண்டு இயங்கும் பெற்றோலியப் பொருட்கள் உற்பத்தி நாடுகள் கூட்டமைப்பான ஒபெக் அமைப்பிலிருந்து வெளியேறப்போவதாக கட்டார் இன்று திடீரென அறிவித்துள்ளது.
பெற்றோலியப் பொருட்கள் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளோம் எனவும் ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த முடிவு அமுலுக்கு வருகிறது என கட்டார் பெற்றோலியத்துறை அமைச்சர் சத் அல் காபி இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதனை ஒபெக் நாடுகளின் கூட்டத்தில் அறிவிப்போம் எனத் தெரிவித்த அவர் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் தங்கள் இடத்தை நிலை நிறுத்திக் கொள்ளவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
தங்களது கச்சா எண்ணெய் உற்பத்தியை நாளொன்றுக்கு 48 லட்சம் பரல்களில் இருந்து 65 லட்சம் பரல்களாக அதிகரிக்க முடிவு செய்துள்ளதாகவும் அதுபோலவே திரவ இயற்கை எரிவாயு உற்பத்தியையும் 7.7 கோடி தொன்களில் இருந்து 11 கோடி தொன்களாக உயர்த்த முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கட்டாரின் இந்த முடிவு பெற்றோலில், டீசல் விலை நிலவரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது