உலகின் அசாதாரணமான சுறா வகைகளான ரே என்னும் வகையை சேர்ந்த மீன்கள் உள்ளிட்டவை அதிகரித்து வரும் வணிகரீதியிலான மீன் பிடிப்பு காரணமாக அழிவின் விளிம்பில் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அழியும் நிலையிலுள்ள 50 அரிய உயிரினங்களை கொண்ட இந்த பட்டியலில்,, ஒரு பேருந்தின் பாதி நீளமுள்ள வாலினால்; இரையை பிடிக்கும் சுறாக்களான ரே வகையும் உள்ளடங்குகின்றது.
மக்களுக்கு இந்த ரே வகை சுறாக்கள் குறித்து தவறான கருத்துக்கள் உள்ளதாக தெரிவித்துள்ள விஞ்ஞானிகள் அவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை எனத் தெரிவித்துள்ளனர்.
இந்த உயிருள்ள படிமங்கள் ஒன்றை இழந்தாலும், மில்லியன் கணக்கான ஆண்டுகள் நிகழ்ந்த பரிணாமவியல் வரலாறு அழிந்துவிடும் எனவும் எப்படிப்பட்ட அச்சுறுத்தலின் கீழ் இவை உள்ளன என்பதை யாரும் புரிந்துகொள்ளவில்லை எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சுறாக்கள் மனிதர்களை கொல்லக்கூடியது என்னும் மிகப் பெரிய கட்டுக்கதையே ஆபத்தானது எனவும் அது முற்றிலும் தவறான ஒன்று எனவும கடல் உயிரியலாளர் பிரான் கபாடா என்பவர் தெரிவித்துள்ளார்.
சுறாக்கள் மனிதர்களின் இறப்புக்கு காரணமாக உள்ளதாக சில பதிவுகள் இருந்தாலும் அவை அடிக்கடி நிகழ்வதில்லை எனவும் அவர் வேண்டுமென்று அவ்வாறு செய்வதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடல்வாழ் உயிரினங்களின் உணவு சங்கிலியில் முதன்மையான இடத்தை வகிக்கும் சுறாக்களின் வாழ்வுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அது ஒட்டுமொத்த மீனினங்கள் மீதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு மனிதர்களின் வாழ்வாதாரத்திலும் பாதிப்பை உண்டாக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தெரிந்தோ, தெரியாமலோ மீன் பிடிக்கும்போது இவற்றின் மீது நடக்கும் தாக்குதல்களே அதீத வீழ்ச்சிக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி, கடற்கரையோர பகுதிகளில் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புகள், மாங்குரோவ் காடுகளின் அழிப்பு, மாசடைந்து வரும் தண்ணீர் ஆகியவையும் முக்கிய காரணமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது