ஹூவாவெய் தொலைத்தொடர்பு குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி மெங் வான்ட்சொவ்வினை கைது செய்தமை தொடர்பில் அமெரிக்காவும், கனடாவும் விளக்கம் அளிக்க வேண்டுமென சீனா வலியுறுத்தியுள்ளது. சீன தொலைத்தொடர்பு நிறுவனமான ஹூவாவெயை நிறுவியவரின் மகள் கடந்த டிசம்பர் முதாலாம் திகதி கனடாவின் வன்கூவர் நகரில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் அமெரிக்காவிடம் அவர் ஒப்படைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அவரது கைது பற்றிய விவரங்கள் வெளியாகாத போதும் ஈரானுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடைகளை ஹூவாவெய் மீறியுள்ளதாக என்பது குறித்து அமெரிக்கா புலனாய்வு மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில் இந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியை கைது செய்திருப்பது மனித உரிமை மனித உரிமை மீறல் எனத் தெரிவித்துள்ள சீனா, அவரை விடுதலை செய்ய வேண்டுமென கோரியுள்ளது.
உலக அளவில் பெரிய தொலைத்தொடர்பு கருவிகள் மற்றும் சேவை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக ஹூவாவெய் உள்ளது. சமீபத்தில் அப்பிள் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளிய ஹூவாவெய், சாம்சங்கிற்கு அடுத்தாக இரண்டாவது பெரிய திறன்பேசி தயாரிப்பு நிறுவனமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மெங் வான்ட்சொவ் மீதான குற்றச்சாட்டுகள் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை எனவும் அவர் தவறுகள் செய்திருப்பதாக தெரியவில்லை எனவும் ஹூவாவெய் நிறுவனம் தெரிவித்துள்ளது. மெங் வான்ட்சொவ் கைது செய்யப்பட்ட பின்னர், அந்த நிறுவனத்தின் ஐரோப்பிய பங்கு சந்தைப் பெறுமதி கடந்த இரண்டு ஆண்டுகளில் காணாத அளவு வீழ்ச்சி அடைந்துள்ளதுடன் ஆசியா முழுவதும் இதன் பங்கு சந்தை குறியீடுகள் பெரும் சரிவை சந்தித்துள்ளன