ஏமனில் சுமார் 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்ற உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருகின்ற நோக்கிலான அமைதிப் பேச்சுவார்த்தை, ஏமன் அரசுப் பிரதிநிதிகள் மற்றும் ஹவுத்தி கிளர்ச்சிக் குழு இடையில் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் ஆரம்பமாகியுள்ளது. இதுவொரு முக்கிய திருப்புமுனை என ஐநா சிறப்பு தூதர் மார்ட்டின் கிரிபித்திஸ் தெரிவித்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையில், கைதிகளை பரிமாற்றம் செய்து கொள்வது தொடர்பில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தம் ஆயிரக்கணக்கான குடும்பங்களை மீண்டும் இணைய வகை செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு வாரம் நடைபெறவுள்ள இந்த பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கு ஏமன் அரசுக்கும், ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே ஐநா மிக நெருக்கமாக பணிபுரிந்துள்ளது.
சமீப காலத்தில் உலகில் மிக மோசமான மனிதநேய நெருக்கடி உருவாக இந்த ஏமன் போர் காரணமாகியுள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ள நிலையில், மில்லியன் கணக்கானோர் பசி, பட்டினியால் துன்புற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஆயிரகணக்கான பொதுமக்கள் சிக்கியுள்ள செங்கடலில் உள்ள ஹூடேடா துறைமுக நகரில் ஏற்படும் போரை தடுப்பது குறித்து முக்கியமாக இந்த அமர்வில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.