ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதன் மூலமே தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணலாம் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அத்துடன் புதிய அரசாங்கத்தை அமைத்து நாட்டின் தலைவிதியை மாற்றுவதற்கு ஜனாதிபதி அனுமதிக்கவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் அரசியல் முட்டுக்கட்டை நிலையை முடிவிற்கு கொண்டுவராவிட்டால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மோசமான விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என எச்சரித்துள்ள அவர் நாடு முன்னோக்கி நகரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய இழப்பினை மக்களே செலுத்தவேண்டியிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக ஐக்கிய தேசிய கட்சி புதிய அரசாங்கத்தை அமைத்து நாட்டின் தலைவிதியை மாற்றுவதற்கு ஜனாதிபதி அனுமதிக்கவேண்டும் என்றும் இலங்கையின் அரசமைப்பையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்கான போராட்டத்தை ஐக்கிய தேசிய கட்சி தொடர்ந்து முன்னெடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் சுயாதீன நீதித்துறை, நீதியான தீர்ப்பை வழங்கும் என்று கூறியுள்ள அவர், 2015இல் நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டவுடன் நீதித்துறையின் சுதந்திரம் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கடந்த மூன்று வருடங்களில் ஐக்கிய தேசிய கட்சியோ அல்லது அதன் தலைவரோ நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடவில்லை என்பது தெளிவாகியுள்ளதாகவும் அகிலவிராஜ் காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.