குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று யாழ்ப்பாணத்தில் அடையாள நடைபவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. நல்லூர் ஆலய முன்றலிலிருந்து மனித உரிமையை பிரகடனப்படுத்தும் பதாகைகளை தாங்கியவாறு ஊர்வலகமாக துர்க்காதேவி மண்டபம் வரை இந்த நடைபவனி முன்னெடுக்கப்பட்டது.
அதன் பின்னர் யாழ். மனித உரிமைகள் முதலுதவிச் சங்கம் மற்றும் இலங்கை சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் மனித உரிமைகள் தின நிகழ்வும் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட், யாழ்.பிராந்திய மனித உரிமைக்குழு ஆணையாளர் ரி.கனகராஜ், பேராசிரியர் ம.பெ.மூக்கையா, பொலிஸ் அத்தியட்சகர் பி.யு.உடுகம, இலங்கை அகதிகள் மறுவாழ்வுக்கழகத் தலைவி சி.சூரியகுமாரி ஆகியோர் விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.
மன்னாரில் சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுஸ்டிப்பு…
மன்னார் மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர்களை மேம்படுத்தும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று (10.12.18) மன்னாரில் நினைவு கூறப்பட்டுள்ளது. மன்னார் நகர மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அருட்தந்தை நேரு அடிகளார்,அகில இலங்கை தமிழ் காங்கிரசின் செயலாளர் செல்வராசா கஜன்,மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன், சட்டத்தரணி செல்வராஜ் டினேசன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கடத்தப்பட்டவர்களின் உறவுகள்,தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள்,மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
நிகழ்வின் போது தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.