இலங்கையில் தொடர்ந்து அரசியல் நெருக்கடி நீடித்து வருகின்ற நிலையில் உயர் நீதிமன்றத்தின் தீர்பினை 14 ஆம் திகதிக்குள் வழங்குமாறு கோரிக்கை விடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலைமையில் நேற்றையதினம் இடம்பெற்ற கட்சியின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்களின் கூட்டத்திலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
சட்டமா அதிபர் மற்றும் பிரதம நீதியரசர் மூலம் இன்று செவ்வாய்க்கிழமை இந்தக் கோரிக்கை முன்வைக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இணைந்த கூட்டணி ஒன்றினை அமைக்கவும் மைத்திரி மகிந்த தரப்பு இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கும் மகிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்குமிடையில் நேற்றையதினம் இடம்பெற்ற சந்திப்பிலேயே இவ்வாறு இணக்கம் காணப்பட்டுள்ளது.
புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ஸ மற்றும் அவரது அமைச்சரவை மீது நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில் அடுத்த கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது ஆராயபபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது