குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலைகளாலும் கடற்சீரின்மை காரணமாகவும் மீனவர்களது தொழில்கள் பாதிப்படைந்துள்ளது . குறிப்பாக நாயாறு பகுதியில் பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ள மீனவ குடும்பங்கள் கடலடிக்கு மத்தியிலும் வாழ்வாதாரத்துக்காக கடலன்னையுடன் போராடி கடற்றொழிலுக்கு சென்று வருகின்றனர். குறிப்பாக நாயற்றுபகுதி மீனவர்கள் இரண்டு மாதங்களாக கடற்தொழிலுக்கு செல்லவில்லை என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அந்தப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள அந்தப்பகுதி மீனவர்கள் தற்பொழுது கடற்போராட்டத்துடன் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
நாயாற்று பெருங்கடற்பகுதி கடற்கரையில் இருந்து 10 மீற்றர் தூரத்தில் சுமார் 20 அடி ஆழமாக அதிகரிக்கின்றது. இதன்படி 100 மீற்றர் தூரத்திற்கு 200 அடி கடல்ஆழம் கொண்ட கடற்பகுதி இது என குறிப்பிடப்படுகின்றது.
மிக ஆழமான இந்தக்கடற்பகுதி தற்பொழுது சீரற்ற நிலையில் காணப்பட்டாலும் தமது வறுமையை போக்க ஆபத்தான இந்த கடற்தொழிலை மேற்கொள்ளவேண்யுள்ளது என மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக இந்த பகுதியில் பருவகாலத் தொழிலுக்காக வருகைதரும் சிங்கள மீனவர்களால் பாதிக்கப்படும் இந்த மீனவர்கள் தற்போது பருவம் நிறைவடைந்து சிங்கள மீனவர்கள் சென்றுள்ள நிலையில் பருவகாலத் தொழில் உரியமுறையில் செய்யாததால் ஆபத்தான நிலையிலும் தற்போது தொழிலுக்கு சென்றுள்ளனர்
குறிப்பாக இந்த பகுதியில் குறித்த மீனவர்களது வாடிகள் உடைமைகள் எரியூட்டப்பட்ட நிலையில் இதுவரை அவர்களுக்கான இழப்பீடுகள் எதுவும் வழங்கப்படவில்லை இந்நிலையில் வாழவாதாரம் இன்றி துன்பப்படும் மீனவர்கள் கடற்சீற்றத்தையும் கருத்தில் கொள்ளாது தமது வாழ்வாதாரத்துக்காக தொழிலில் ஈடுபடுகின்றனர்
தற்போது கடலடி காரணமாக அனைத்து மீனவர்களும் களப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளதால் அங்கும் மீன்பிடியில் ஈடுபடமுடியாது எனவே உயிரை வெறுத்தேனும் குடும்பத்தை வாழவைக்க தொழிலுக்கு செல்லவேண்டும் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்
கடலுக்கு செல்லும் உறவுகள் உயிரோடு வருவார்களா என்ற ஏக்கத்தில் காத்திருப்பதாகவும் வாழ வழியின்றி தொழிலுக்கு செல்கின்றனர் என்றும் உறவுகள் தெரிவிக்கின்றனர்