ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாம் நடத்திய நாடகத்தை இத்துடன் முடித்துக்கொண்டு இனியாவது நாட்டை பற்றி சிந்திக்க வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
உயர்நீதிமன்றம் தீர்ப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த நீதியான தீர்ப்புடன் ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பு இன்று பலமானதாகவும், ஜனநாயகம் இன்று உறுதியானதாகவும் கூறிய அவர், இந்த வெற்றியை நாங்கள் அமைதியாக கொண்டாட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தேவையற்ற ஆலோசனைகளை கேட்டு இனியும் ஜனாதிபதி செயற்படக் கூடாது என சுட்டிக்காட்டிய சஜித், இது நாட்டுக்கு கிடைத்த வெற்றி என்றும் ரணிலை மீண்டும் பிரதமராக ஜனாதிபதி நியமிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். அத்துடன் இனியும் இந்த நாடகம் வேண்டாம் என்றும் ஜனாதிபதி நாட்டை பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் மேலும் தெரிவித்தார்.