இலங்கை பிரதான செய்திகள்

பாராளுமன்றத்தை நான்கரை வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதியினால் கலைக்க முடியாது…

பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான தீர்ப்பு சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பாராளுமன்றத்தை நான்கரை வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதியினால் கலைக்க முடியாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பாராளுமன்றம் கலைக்கப்பட்ட விதம் அரசியலமைப்பிற்கு முரணானதென இலங்கை உயர்நீதிமன்றின் ஏழு நீதியரசர்கள் அடங்கிய குழாம் தீர்ப்பை அறிவித்துள்ளது.
பாராளுமன்ற கலைப்பு விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பை மீறியுள்ளதாகவும் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் ஆட்சியமைக்கப்பட்டு நான்கரை வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைக்க முடியாதென நீதியரசர்கள் குழாம் தெரிவித்துள்ளது. அதன் பின்னர் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டுமாயின் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து நாட்டில் அரசியல் நெருக்கடியும் ஸ்திரமற்ற தன்மையும் தோன்றின. இந்நிலையில் மைத்திரிபால சிறிசேன மற்றும் மகிந்த ராஜபக்ச தரப்பிற்கும் ரணில் விக்கிரமசிங்க தரப்பிற்கும் இடையில் கடுமையான முரண்பாடு ஏற்பாடு ஏற்பட்டது.

பாராளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஐ.தே.க. கோரி வந்த நிலையில், கட்சி தாவல்களும் இடம்பெற்றன. பெரும்பான்மையை பெற முடியாத நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாராளுமன்றத்தை கலைத்து, ஜனவரி 5ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படுமென அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டார்.
மக்கள் பிரதிநிதிகள் விலைபேசப்பட்டமை, சபாநாயகரின் பாரபட்சமான செயற்பாடு மற்றும் பாராளுமன்றில் பிரச்சினை ஏற்படுவதை தடுத்தல் என்பவையே நாடாளுமன்றத்தை கலைக்க வழிவகுத்தது என பாராளுமன்றத்தை கலைத்தமைக்கான காரணத்தை ஜனாதிபதி மைத்திரி குறிப்பிட்டார். எனினும், ஆட்சியமைக்கப்பட்டு நான்கரை ஆண்டுகள் நிறைவடைவதற்கு முன்னர் பாராளுமன்றை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லையென தெரிவித்து உயர்நீதிமன்றில் பத்திற்கும் அதிகமான அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி,  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் சிவில் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் மனுக்களை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற கலைப்பு – வர்த்தமானி அறிவித்தல் – தேர்தல் – நீதிமன்ற தீர்பு வெளியாகிறது…

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை மற்றும் தேர்தலொன்றை நடத்துவதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ஆகியவற்றுக்கு எதிராகவும் ஆதரவாகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, இன்று (13) மாலை 4 மணிக்கு வழங்கப்படவுள்ளது.

இந்த மனுக்கள், பிரதம நீதியரசர் நலின் பெரேரா தலைமையிலான எழுவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில், கடந்த வௌ்ளிக்கிழமையன்று விசாரணை நடத்தி முடிக்கப்பட்டன.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட​தான வர்த்தமானி அறிவித்தலுக்கு, ஏற்கெனவே இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.