Home இலங்கை நன்றாகப் பழுத்து விழுந்த ஓலை…

நன்றாகப் பழுத்து விழுந்த ஓலை…

by admin

தனது தொண்ணூற்று இரண்டாவது வயதில் காலமான பிறின்ஸ் காசிநாதர் – தகைசார் ஓய்வுநிலைப் பேராசிரியர் சி. மௌனகுரு
———————————————————-


1960 களின் கடைப்பகுதி அன்றைய தமிழரசுக்கட்சியின் ஹர்த்தாலினால் மட்டக்களப்பு ஸ்தம்பித்துப்போய் இருந்தது மட்டகளப்பின் கச்சேரி இயங்கவில்லை. மக்கள் அதனை ஒரு மாத காலம் இயங்க விடவில்லை அதைச் சுற்றி இராப்பகலாகச் சத்தியாக்கிரகத் தொண்டர்கள் தமிழுணர்ச்சி கரை புரண்டோடியது. அந்தச் சத்தியாகிரகிகளினால் மட்டக்களப்பின் அனைத்து மக்களும் ஈர்க்கப்பட்டனர். அப்போது காலம் சென்ற கவிஞர் சுபத்திரன் என அழைக்கப்பட்ட தங்கவடிவேல் கா,சி ஆனந்தன்,முழக்கம் முருகப்பா எனது மைத்துனர் வடிவேல் ரமணி, ,தம்பையா ஆகியோர் மட்டக்களப்பு மத்தியகல்லூரியில் படித்துக் கொண்டிருந்தனர்.துடிப்பான மாணவர்கள். அவர்கள் இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் முன்னணித் தொண்டர்கள்.நான் வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் உயர்தர வகுப்பில் நான் படித்துக்கொண்டிருந்தேன் வயது 16 சத்தியாக்கிரகத்தில் நானும் ஓர் தொண்டன் இந்த மாணவத் தொண்டர்களுக்கிடையே அடிபட்ட பெயர்களில் ஒன்று பிறின்ஸ் காசிநாதர் அவர் மட்டக்களப்பு மத்திய கல்லூரியின் ஆங்கில ஆசிரியர். இளைஞர் அவருக்கு எல்லோரும் கிடி நடுக்கம்

 

அவருக்குப் பயந்து பயந்துதான் அவர்கள் சத்தியாக்கிரகத்தில் பங்குகொண்டனர். அந்தப் பயங்கரமான ஆசிரியர் பற்றி என்னிடம் பல கதைகள் கூறினர். அவரின் அடிகளும் ஏச்சுகளும் பற்றிக் கதை கதையாகக் கூறினர். என் மனதில் ஓர் கண்டிப்பான் மனிதரின் உரு பதிந்து விட்டது. அவர் கற்பித்த கல்லூரியில்தான் எஸ்.பொ வும் எழுத்தாளர் பாலகிருஸ்ணனும் கற்பித்தனர் அவர்களும் அவரின் கண்டிப்பு பற்றி என்னிடம் கூறியுள்ளனர். தமிழரசுக்கட்சி எதிர்ப்பாளர்களில் காசிநாதர் ஒருவர் எனும் பிம்பம் இன்னொரு வகையில் அவர் ஓர் தமிழ்த் துரோகியாக எம் போன்ற சிறுவர்களால் பார்க்கப்பட்டார்.

1966 67 களின் நடுப்பகுதியில் மட்டக்களப்பில் கிருஸ்ணக்குட்டி தக்லைமையில் கம்யூனிஸ்ட் கட்சி தீவிரமாக இயங்கியது அதற்கு தொழிலாளர் மத்தியில் சிறிது ஆதரவும் இருந்தது. அக்கட்சி சார்பில் அன்றைய இளைஞர்களான நானும் சுபத்திரனும்,வடிவேலும் இன்பமும் துரைரத்தினமும் சிவராஜாவும் இன்னும் சிலரும் மலை நாட்டில் மண் சரிவால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உதவ ஒரு கலை நிகழ்வு நடத்த பாடசாலைகளுக்கு ரிக்கற் விற்கச் சென்றோம்

அந்தப் பயங்கரமான பிறின்ஸ் காசிநாதர் என்ற இளம் ஆசிரியரை மத்திய கல்லூரியில் சந்தித்தோம் அந்த முதல் சந்திப்பு எனக்கு இப்போதும் மனதில் பதிந்துள்ளது
அவரின் உயர்ந்த உருவம் மிடுக்கான தோற்றம்,அரும்பான மீசை கூர்மையான பார்வை எம்மைப் பயமுறுத்தின ஆங்கிலத்தில் சில கேள்விகள் கேட்டார் நாம் பதில் சொல்லாமல் நின்றோம் பின் தமிழில் ஆரம்பித்தார் நீங்கள் எல்லாம் கம்யூனிஸ்ட்களா? என உறுக்கி ஒரு கேள்வி கேட்டு முதலில் படியுங்கள், பின்னர் அரசியலில் ஈடுபடுங்கள் என உறுக்கி அனுப்பினார்’ மாணவர்களைக் கண்டிக்கும் ஆசிரியத் தனம் அவர் குரலில் காணப்பட்டது ரிக்கட் எடுக்கவேயில்லை முணு முணுத்துக்கொண்டு வெளியேறினோம் அவர் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பாளர் எனும் பிம்பம் பதிந்தது இன்னொரு வகையில் இவர் ஓர் தொழிலாள வர்க்க துரோகி என்ற எண்ணம் வந்தது மொத்ததில் தமிழ்த் துரோகி. தொழிலாள வர்க்கத் துரோகி அன்றைய எங்கள் வயதுக்கேற்ற அனுபவத்திற்கேற்ற எடைபோடல் அது அன்று மட்டக்களப்பு பாராளுமன்றப் பிரதிநிதி செல்லையா ராஜதுரை.

இராஜதுரையின் வருகையை ஆதரிக்காமல் படித்தவர்கள் பாராளுமன்றம் செல்ல வேண்டும் எனக்கூறியவர்களுள் ஒருவர் பிறின்ஸ் காசிநாதர் ராஜதுரை பிரின்ஸ் காசிநாதரின் மாணவன் தமிழரசுக்கட்சி எதிர்ப்பாளரகவும் தமிழ்த் துரோகியாகவும் கம்யூனிஸ்ட் கட்சின் எதிர்ப்பாளராகவும் தொழிலாளவர்க்க விரோதியாகவும் பாராளுமன்றம் படித்தவர் செல்ல வேண்டிய இடமென்று கூறும் மேட்டுக்குடி மகனாகவும் துடிப்போடு செயற்பட்ட மட்டக்களப்பு இளஞர்களின் மனதில் அன்று ஆழப பதிந்த இதே பிறின்ஸ் காசிநாதர்

பாராளுமன்ற உறுப்பினரானதும்,, தொழிலாளி மக்களுக்காக குரல் கொடுத்ததும், தமிழர்க்காக வாதாடியதும் மட்டகளப்பின் சாதாரண மக்கள் பிரச்சனைகளுக்காக உயர் அதிகாரத்துடன் நேரடியாகவும் கடிதமூலமாகவும் போர் நடத்தியதும் ஒருவகையில் இடது சாரிச்சிந்தனைகள் கொண்ட ஈ பீ ஆர் எல் எப் எனும் கட்சியின் மட்டக்களப்புப் பிரதி நிதியாகப் பாராளுமன்றம் சென்றதும் ஒரு முரண் நகை என்பதுடன் வரலாற்றின் விசித்திரங்களிலும் ஒன்று பிறின்ஸ் மட்டக்காளப்பின் பாரம்பரிய நிலவுடமையாளர் குடும்பத்தில் வந்தவர். காசிநாதர் குடும்பம் என்பது மட்டக்களப்பில் அறியப்பட்ட குடும்பம் அவர்கள் முன்னோர்கள் சைவ மதத்தினர் பின்னாளில் அவர்கள் புய்ரட்டஸ்தாந்துக் கிறிஸ்தவ மதம் சார்ந்தார்கள். பாரம்பரிய இரத்தமும் நவீன சிந்தனைகளும் பிரதேசப் பற்றும் கொண்டவராக இளம் வயதிலிருந்தே வளர்ந்து வந்தவர் காசிநாதர் ஆங்கிலம் அவருக்குப் பிடித்தமாயிற்று .ஆங்கிலத்திலும் லத்தீனிலும் அவர் பாண்டித்தியம் பெற்றார்.

அக்காலத்தில் ஆங்கில ஆசிரியர்களைப்பயிற்றுவித்த சிறந்த நிறுவனம் மஹாறகம ஆங்கில ஆசிரிய பயிற்சிக்கலாசாலை அங்கு பயின்று ஆங்கில ஆசிரியரானார் பிறின்ஸ் காசிநாதர். ஆங்கிலம் உலக மொழி என்பதிலும் அதனை அறிவதன் மூலமே உலகை அறியலாம் முன்னேறலாம் என்பதிலும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார் அவர் தனது ஆங்கில ஆசான் பி,வி,கணபதிப்பிள்ளை என என்னையும் என் என் மனைவியையும் சந்திக்கும்போதெல்லாம் மறக்காமல் கூறி மகிழ்வார் பிறின்ஸ் காசிநாதர், பி,வி,கணபதிப்பிள்ளை எனது மாமனார், என் மனைவி சித்திரலேகாவின் தந்தையார்.
யாழ்ப்பாணம் வடமராட்சியில் அல்வாயைச் சேர்ந்தவர்.

பாரம்பரிய சைவ மதம் பேணிய குடும்பத்தில் பிறந்த இவர் பின்னாளில் போல் என் நாமம் தாங்கிக் கிறிஸ்தவராகிப் பின்னர் மீண்டும் சைவரானவர் இந்த போல் ஆங்கிலத்தில் வல்லவர் பருத்தித் துறை ஹாட்லிக் கல்லூரியில் அன்று வல்லாரிடம் ஆங்கிலம் பயின்றவர் அன்றே லண்டன் மெற்றிகுலேசன் பரீட்சையில் சித்தியும் பெற்றவர் பின்னாளில் கொழும்பில் கொழும்பு மொழிபெயர்ப்புத் திணைக்களத்தில் பணி புரிந்தவர் அவர் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கு ஆசிரிய நியமனம் பெற்று வந்தபோது பிறின்ஸ் காசிநாதருக்கு ஆரம்பத்தில் ஆங்கிலம் கற்பித்தார்.அதன் மூலம் பிறின்ஸின் ஆங்கில ஆசிரியருமானார் அதனை பிறின்ஸ் காசிநாதர் ஒருபோதும் மறக்கவில்லை அடிக்கடி எங்கள் இருவரைக் கண்டதும் ஞாபகப்படுத்துவார்.அயலில் இருப்பவரிடம் எனது ஆரம்ப ஆங்கில ஆசான் பி,வி கணபதிப்பிள்ளை சேர் எனக் கூறி மகிழ்வார் , சிறந்த குரு பக்தி மிக்கவர்

பின்னால் பிறின்ஸ் காசிநாதர் பற்றி நிறையவே அறிய முடிந்தது அவரின் ஆங்கிலப்புலமையுடன் அவரது ஆங்கில எழுத்தாளுமை அவரது பிரதேசப்பற்று மக்கள் நலநாட்டம்,, சாதாரண மக்களுக்கு உதவும் மனப்பாங்கு அடிமட்ட மக்களின் முன்னெற்றத்தில் அவர் கொண்டிருந்த தீவிரம், தமிழ் இஸ்லாமிய ஒற்றுமையில் அவருக்கிருந்த அக்கறை ஒழுக்கமும் கட்டுப்பாடுமுள்ள மாணவர் சமூகத்தை உருவாக்குவதில் அவருக்கிருந்த வேகம் கல்வி கற்றோரைக் கனம் பண்ணும் அவரது உயரிய மனப்பாங்கு போலித்தனமான உணர்ச்சிகரமான பேச்சுகள் மீது அவருக்கு இருந்த வெறுப்பு என்பன தெரியலாயின ஆசிரியராக இருந்த அதே வேளை அவர் ஒரு ஜேர்னலிஸ்ட்டாகவும் இருந்தார் அவர் மட்டக்காலப்பு பற்றியும் முக்கியமாக அதன் இயற்கை அமர்வு சில வரலாற்று விடயங்கள் முக்கியமாக பாடும் மீன்கள் பற்றி ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார் .அரிய ஆவணங்கள் அவரிடம் உள்ளன அவர் ஆரம்பத்தில் இடது சாரிக் கொள்கையினால் ஈர்க்கப்பட்டிருந்தார் என்பதும் லங்க சமசமாஜக் கட்சி ஆதரவாளராயிருந்தார் என்பதும் அக்கட்சி முக்கியஸ்தர்களான கலாநிதி என்,எம் பெரேரா,கொல்வின் ஆர் டி சில்வா ஆகியோருடன் தொடர்பு கொண்டிருந்தார் என்பதும் எனக்குப் பின்னால் தெரிய வந்த செய்திகள். இவற்ரை நான் அவர் பற்றி எழுதிய கட்டுரை ஒன்றில் பதிந்துள்ளேன் அவர் ஆசிரிய தொழிற்சங்கத்திலும் அதன் செயலாளராகப் ப்ணி புரிந்தவர் இவர்தானா எங்களைப் ப்பார்த்து நீங்கள் கம்யூனிஸ்ட்களா? என வெறுப்புடன் கேட்டார் என நாம் பின்னாளில் கதைத்தும் கொண்டோம் அவரைப்பற்றிய எமது பிம்பமும் மாறலாயிற்று அவர் எமக்கு நெருக்கமானார்.

1978 இல் மட்டக்களப்பில் பெரும் சூறாவளி வந்து மட்டக்களப்பையே தலைகீழாக்கி விட்டது.அலமந்து போயினர் மட்டக்களப்பு மக்கள்.
நாம் அப்போது யாழ்ப்பாணப் பல்கலைக்க்ழகத்தில் கற்பித்துக்கொண்டிருந்தோம்
அங்கிருந்து இங்கு நாம் பல் சிரமங்களுக்கு மத்தியில் ஒரு பெரும் குழுவாக வந்தோம்
உடைந்து தகர்ந்து கிடந்த மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் கூரையில் மாணவர்களுள் ஒருவராக நின்று ஓடு போட்டுக்கொண்டு வெற்று மேலுடன் ஓர் தொழிலாளியாகக் காட்சி தந்தார் பிறின்ஸ் காசிநாதர்
1989 இல் அவர் ஈ;பீ ஆர் எல். எப் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டமை அவரை நன்கறிந்த எம்போன்றோர்க்கு மிகுந்த ஆச்சரியம் அளித்தது.
அவர் மட்டக்களப்பின் எம் பி ஆனார்
அக்காலம் மிகவும் மோசமான காலம்
பலரை அவர் சமாளிக்க வேண்டியிருந்தது
. ஒருபக்கம் போராளிகள் இராணுவம்
மறுபக்கம் அரசாங்க இராணுவம்
முக்கியமாக இந்திய இராணுவம்,
இரு பக்கத்திலும் அவரது மாணவர்கள் இருந்தனர்.
அதனைப்ப்யன் படுத்தின் மக்களுக்காக அவர் வேலை செய்தமையை இன்றும் பலர் நினைவு கூர்வர் தன் ஆளுமையினால் அவர் அனைவரையும் வென்றார்

எப்போதும் அவர் மக்கள் பக்கத்தில் நின்றார்
நான் 1992 இல் யாழ்ப்பானப்பல்கலைக் கழச்கத்திலிருந்து மாறுதலாகி கிழக்குப்பல்கலைக்க்ழகம் வந்து விடுகிறேன்.
பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் பீடாதிபதியும் ஆகிவிடுகிறேன் அவர் பல்கலைக்க்ழகப் பேரவை உறுப்பினராக இருக்கிறார்.
பீடாதிபதி என்ற வகையில் நானும் பேரவை உறுப்பினர் மூதவையை உறுப்பினரின் பிரதி நிதி நென்ற வகையில் என் மனைவி சித்திரலேகாவும் பேரவையின் ஓர் உறுப்பினர்
மாதம் ஒருமுறையும் இடையிடையேயும் பேரவைக் கூட்டம். நடைபெறும்
அடிக்கடி அவரைச் சந்திக்கக் கிடைக்கிறது
.அவரது ஆலோசனைகள் பல்கலைக்க்ழகத்திற்கும் உப வேந்தருக்கும் கிடைக்கிறது
பல்கலைக்ழகத்தில் அன்று மாணவர்கள் பிரச்சனைகள் எற்பட்டால பிறிண்ஸ் காசிநாதரின் ஆலோசனைகளை வேண்டி நிற்பார் அன்றைய உபவேந்தர் பேராசிரியர் சந்தானம்
பேரவையில் பிரின்ஸ் காசிநாதர் கதைப்பது ஓர் உரையாற்றுவது போலத்தான் இருக்கும்.அழகான ஆங்கிலத்தில் அறுத்து உறுத்துப்பேசுவார்
அவர் பேச்சில் எப்போதும் நகைச்சுவை இழையோடும் கிண்டல் நிறைந்திருக்கும்,
அவருடன் யாரும் முண்டமாட்டார்கள்.
அவரோடு வாதிடுவதும் முரண்டுவதும் எதிர்வாதம் புரிவதும் எனது மனைவியார் சித்திரலேகாதான்
,சில வேளை தர்க்கம் உச்சக்கட்டம் சென்று விடுவதும் உண்டு

கூட்டம் முடிந்து அனைவரும் அமர்ந்து சாப்பிடுகையில்
“தகப்பனைப்போல இருக்கிறாள் என்று கூறி
“:மகள் இந்த துணிவு எனக்குப்பிடிக்கிறது,,இதை விட்டு விடாதே”
என்று உற்சாகப்பபடுத்தி
“என் ஆசிரியரின் பிள்ளை” என மற்றவர்க்கும் சித்திராவை அவர் அறிமுகம் செய்யும் பாங்கு இன்றும் மனதை நிறைக்கிறது

நுண்கலைத் துறை நடத்தும் நாடக விழாவிற்கு அவரைப் பிரதம விருந்தினராக அழைப்போம், அவருக்கேயுரிய புஸ்கோட் அணிந்து மாலைதாங்கி கம்பீரமாக மத்தள அணியோடு வந்து அவர் குத்து விளக்கேற்றுவது ஓர் கண்கொள்ளாக்காட்சி
மட்டக்களப்பில் அவர் பலரதும் எதிர்ப்புகளைச் சம்பாதித்தவர்., எனினும் அவரிடம் மிக மோசமாக ஏச்சு வாங்கி அடி வாங்கி படித்தவர்கள்தான் அவரின் மிக நெருக்கமானவர்களும் ஆனார்கள்
அவர் எதனையும்சேர்த்து வைக்கவில்லை,
அவரது நேர்மை அதற்கு அவரை அனுமதிக்கவில்லை
1997 ஆம் ஆண்டு என நினைக்கிறேன் மோசமான இராணுவக்கெடுபிடிகள் நிறைந்த காலம் அவர் அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாரா என்பது நினைவில்லை ஒரு நாள் கொட கொடவென ஓடும் சி,ரி,பி லைன் பஸ்ஸில் நான் கொழும்பு செல்கிறேன்
மக்களோடு மக்களாக அவரும் என்னுடன் பிரயாணம் செல்கிறார்
கதைத்துக்கொண்டு செல்கிறோம்

ஹபரணையில் இறங்கி ஏறுகையில் அவரது காலில் அடிபட்டு இரத்தம் வழிகிறது அதனையும் தாங்கிக்கொண்டு பிரயாணம் செய்கிறார்
எம் பிக்கள் ஆனதும் மிகப்பெரிய வானில் சொகுசாகப் பிரயாணம் செய்யும் இன்றைய ஆட்களின் ஞாபகம்தான் இப்போது வருகிறது
அவரது கடைசிக்காலம் மிகவும் துயர்மானது
உண்மையும் நேர்மையும் அர்ப்பணமும்ம் அவருக்கு அளித்தவை தனிமையும் முதுமையும் வறுமையயும்தான்
அவரது பரம்பரை வீடும் விற்கப்பட்டு விட்டது.
ஆனால் அந்த வீட்டை வாங்கிய மிகபெரிய மனம் கொண்ட அவரது மாணவர் அவர் இறந்த பிறகே அந்த வீட்டைத் தான் எடுப்பதாகக் கூறியமையினால்
மட்டக்களப்பில் மத்திய கல்லூரிக்கு அருகில் இருந்த
தனது பழைய வீட்டில்
தனது ப்ழைய மரத்தளபாடங்கள்
,பழைய புத்தகங்கள் ,
பழைய உடுப்புகள்
பழைய பாத்திரங்கள்
பழைய போட்டோக்களுடனும்
பழைய நினைவுகளுடன் தனது இறுதிக் காலத்தைக் க்ழித்து வந்தார்.பிறின்ஸ் காசிநாதர்’
சிலர் அவரை இடைக்கிடை சென்று சந்தித்து வந்தனர்
அடிக்கடி சென்று சந்திப்பவர்களில் நானும் என் மனைவியும் அடங்குவோம்
போகாவிட்டால் உரிமையோடு போனில் அழைத்து “

“நான் செத்த பிறகா வரப்போகிறீர்கள்” என்பார்
தனது முதுமையை தனிமையைத் தனக்கேயுரிய பாணியில் எம்முடன் பகிர்ந்து கொள்வார்
அவர் இறுதிக்காலம் வரை அவருடனான தொடர்பு எனக்கு வாழ்க்கையின் இன்னொரு ன்பக்கத்தைக் கற்பித்திருக்கிறது

இருந்தபோது புகழ்மிக்க ஆசிரியனாக இருந்து கற்பித்த அவர் தன் இறப்பிலும் எமக்குக் கற்பிக்கிறார்
சேர் நீங்கள் போனில் செத்த பிறகா வரப்போகிறீர்கள் எனக்கேட்பீர்கள்
என்ன துயரம்
இப்போது நான் வெளியில் நிற்கிறேன் உடனே வர முடியாத நிலை
செத்தபிறகும் உங்களைக்காண வரவில்லையே என்ற துயரம் மனதை இருள்போல அப்பிக் கிடக்கிறது
சென்று வாருங்கள் சேர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More