ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவும் நேற்றைய தினம் இரவு சந்தித்து உரையாடியுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
பாராளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்தமை தவறு என நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர், நடைபெற்ற இந்த சந்திப்பின்போது சபாநாயகர் கருஜெய சூரியவை பிரதமராக நியமிக்க தான் விரும்புவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
எனினும் ரணில் விக்கிரமசிங்க இதற்கு இணங்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து, சில நிபந்தனைகளுடன் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார். அத்துடன் ஐக்கிய தேசி முன்னணி அரசாங்கம் தொடர்பிலும் இதன்போது உரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை, சபாநாயகர் கருஜெயசூரியவையும் ஜனாதிபதி தனியாக சந்தித்து உரையாடியுள்ளார். பிரதமர் பதவியை ஏற்குமாறு அவரிடம் வலியுறுத்தியபோதும் அதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவே பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என்றும் கருஜெயசூரிய இதன்போது வலியுறுத்தியுள்ளார்.