Home இலங்கை ‘சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகமும் கல்விசார் அபிவிருத்திப் பணிகளும்…

‘சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகமும் கல்விசார் அபிவிருத்திப் பணிகளும்…

by admin

(2016 – 2018 வரையான காலப் பகுதிகளை மையப்படுத்தி)’ –  வானதி பகீரதன்…


சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் கடந்த மூன்று ஆண்டுகளில் மிகச்சிறந்த முறையில் கல்விசார் அபிவிருத்தியை நோக்கி பயணித்துள்ளமையை அவதானிக்க முடிகிறது. இந்நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்களின் அயராத உழைப்பும் அர்ப்பணிப்பும் அவரோடு இணைந்து செயற்பட்ட கல்விசார்,கல்வி சாரா ஊழியர்களின் செயற்றிறன் மிக்க செயற்பாடுகளும் இவ் அபிவிருத்தி பாதைக்கான கதவுகளைத் திறக்கும் திறவுகோல்களாய் அமைந்தன.

இவ் அழகியல் கற்கைகள் நிறுவகம் தற்போது எமது நாட்டில் மட்டுமன்றி சர்வதேச அளவிலும் பிரபல்யம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதற்கு இந் நிறுவகம் கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்திவந்த சர்வதேச ஆய்வு மாநாடுகளும் சர்வதேச புலமைத்துவங்களின் வருகையும் அவர்களால் நடாத்தப்பட்ட பயிற்சிப்பட்டறைகளும் முக்கிய காரணங்கள் எனலாம். ஆய்வு மாநாடுகளுக்கு பல்வேறு நாடுகளிலிருந்து ஆதார சுருதி உரைகளை வழங்குவதற்காக கல்வியலாளர்களும். புலமையாளர்களும் பேராசிரியர்களும் வரவழைக்கப்பட்டதுடன் அவர்கள் எமது நிறுவகத்தின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் பங்குகொண்டு மாணவர்களுக்காக சிறந்த பயிற்சிப்பட்டறைகளையும் கருத்துரைகளையும் வழங்கினர்.

சர்வதேச பல்கலைக்கழகங்களைச் சார்ந்த கலாநிதி. கிரன்கிரவல், ஈவா அம்ரோஸ்,பேராசிரியர் பிரெண்டா பெக்,கலாநிதி மரியா லுக்மான் கலாநிதி எலிசபத் டீன் ஹேமான் போன்ற புலமைசார் அறிஞர்களை எமது நிறுவக மாணவர்களும் விரிவுரையாளர்களும் நன்கு அறிந்து கொள்ளவும் அவர்களோடு புலமைத்துவ தொடர்புகளை பேணிக்கொள்ளவும் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளவும் முடிந்தது. சர்வதேச நாடுகளிலிருந்து சிறந்த புலமையாளர்கள் எமது நாட்டுக்கு வருகை தரும் பட்சத்தில் அவர்களை எமது நிறுவகத்திற்கு வரவழைத்து பயனுறுதிமிக்க கலந்துரையாடல்களையும் கருத்துப் பகிர்வையும் ஒழுங்கமைப்பதில் எமது நிறுவகப் பணிப்பாளரின் பங்கு மிக முக்கியமானது எனலாம்.

இலங்கையிலுள்ள அழகியற் கற்கைகள் நிறுவகங்கள் யாவற்றையும் விட எமது நிறுவகம் கடந்த மூன்று ஆண்டுகளில் மிகுந்த வளர்ச்சி பெற்றுள்ளது எனக்கூற முடியும். கலைத்திட்ட விரிவாக்கம், புதிய கலைகளை அறிமுகம் செய்தல், அதிதி உரைத்தொடர்களை ஒழுங்கமைப்புச் செய்தல், கருத்தரங்குகள் கலந்துரையாடல்களை நடத்துதல், பயிற்சிப்பட்டறைகளை நடத்துதல், கண்காட்சிகளை நடாத்துதல், அறிஞர் பெரியோர்களது ஆய்வுப்பணிகளை நினைவு கூர்தல், விழாக்கள், பண்டிகைகளை ஒழுங்கமைத்தல், உலக நாடக தினம,; உலக தமிழ்மொழி தினம் போன்றவற்றை கொண்டாடுதல் போன்ற பல்வேறு செயற்றிறன் மிக்க செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.

கலைத்திட்ட விரிவாக்கம்
எமது நிறுவகம் கிழக்குப்பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டதிலிருந்து பயன்பாட்டிற்கு வந்த கலைத்திட்டமே நடைமுறையில் இருந்தது. தற்போது பணிப்பாளரது முயற்சியினால் தற்கால நடைமுறைகளுக்கேற்ற வினைத்திறன் மிக்க நுண்கலைப்பட்டதாரிகளை உருவாக்குவதற்கு ஏற்ற முறையில் சிறந்த கலைத்திட்டம் பல்வேறு வளவாளர்கள், புலமையாளர்களின் ஆலோசனைகளுக்கும் வழிகாட்டலுக்குமமைய புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்புல தொழிநட்பத்துறைக்கான பாடத்திட்டம் கலாநிதி மரியா லுக்மான் அவர்களாலும் நடனத்துறைக்கான பாடத்திட்டம்; கலாநிதி அரங்கராஜன் அவர்களாலும் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எமது நிறுவகத்திற்கான கலைத்திட்ட மறுசீரமைப்பு பல்வேறு துறைசார்ந்த அறிஞர்கள், பேராசிரியர்கள், புலமையாளர்களின் ஆசோசனைகளுக்கும் வழிகாட்டுதல்களுக்கும் அமைய மேற்கொள்ளப்பட்டுள்ளமை சிறப்பிற்குரியதாகும். பதிய பாடத்துறைகள் சார்ந்த பாடத்திட்ட வடிவமைப்பிற்கு துறைசார்ந்த வளவாளர்களாக பல்கலைக்கழகம் சார்ந்த பேராசிரியர்கள் பலரும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலிருந்தும் வரவழைக்கப்பட்டு கருத்துரைகள் கலந்துரையாடல்கள் ஆலோசனைகள் பெறப்பட்டன.

புதிய கற்கை நெறிகளை அறிமுகம் செய்தல்

எமது நிறுவனத்தில் இதுவரை இசை, நடனம், நாடகம், கட்புல தொழில் நுட்பத்துறை சார்ந்த நான்கு கற்கைநெறிகளே உள்ளன. நிறுவகப் பணிப்பாளரின் அயராத முயற்சியினால் புதிய கற்கை நெறிகளாக உள்ளு10ர் உணவுப் பண்பாடும் தத்துவங்களும், தமிழர் இசை மரபு, தமிழர் நாடக மரபு, தமிழர் இசைக்கருவி மரபுகள், இலக்கியம், வழக்காறுகள் மற்றும் மொழிபெயர்ப்பியல், நாட்டார் வழக்காறுகளும் பண்பாடும் ஆகிய கற்கை நெறிகளை ஆரம்பிப்பதற்கான திட்டவரைபுகள் யாவும் பூர்த்தியாக்கப்பட்டுள்ளதுடன் பல்கலைக்கழக மட்டத்தில் அவற்றுக்கான அனுமதிகளும் பெறப்பட்டு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் அனுமதிக்காக அனுப்பப்படுவதற்குத் தயாராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய துறைகள், கற்கை அலகுகளின் வளர்ச்சி

இது கால வரை எமது நிறவகத்தில் இசைத்துறை , நடன நாடகத்துறை, கட்புல தொழில்நுட்பத்துறை என்ற மூன்று துறைகள் மாத்திரமே இயங்கி வருகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் எமது நிறவகத்தின் பணிப்பாளர் நடன நாடகத்துறையிலிருந்து நாடகத்துறையை தனியான ஒருதுறையாக விரிவுபடுத்துவதற்கான முன்னெடுப்புக்களை மேற்;கொண்டு வருவதுடன் மொழி கற்கைகள் அலகு, தகவல் தொழில்நுட்ப அலகு, தொழில் வழிகாட்டல் அலகு, ஊழியர் முன்னேற்ற அலகு, உள்ளக தர நிர்ணய அலகு, சிறவர் பராமரிப்பு பிரிவு, கலையும் கைவினைப்பிரிவும,; மேலதிக கற்கைகள் அலகு போன்ற பல்வேறு புதிய அலகுகளை உருவாக்கி அவற்றுக்கான இணைப்பாளர்களையும் நியமனம் செய்துள்ளமை எமது நிறுவகம் கடந்த மூன்று ஆண்டுகளில் பெற்றுள்ள வளர்ச்சிக்குச் சான்றுகளாகும்.

அதிதி உரைத் தொடர்கள்

எமது நிறுவகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவரை 13 அதிதி உரைத் தெடர்கள் இடம் பெற்றுள்ளன. பேராசிரியர் உமாகுமாரசுவாமி, பிறின்ஸ் காசிநாதர், கலாநிதி தர்ஸன் அம்பலவாணர், பேராசிரியர் என்.எம் அனஸ், கலாநிதி கிரன் கிறவல், பேராசிரியை பிரண்டாபெக் எலிசபெத் டீன் ஹேமான், சந்திரகுப்த தேனுவர,பேராசிரியர் சிவசேகரம், பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு, பேராசிரியை கமலா விஸ்வேஸ்வரன், கலாநிதி எஸ். ரகுராம், கலாநிதி அரங்கராஜன் ஆகிய உள்நாட்டு, வெளிநாட்டுப் புலமையாளர்கள் பலரும் தங்களது கருத்துரைகளைப் பகிhந்;து கொண்டனர். இவ் அதிதி உரைத் தொடர்கள் யாவற்றையும் ஆவணப்படுத்துமுகமாக அவற்றை ஒரு தொகுப்பாக வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை எமது நிறுவகத்தின் பணிப்பாளர் முன்னெடுத்து வருகின்றார்.

கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் , பயிற்சிப்பட்டறைகளின் அதிகரிப்பு

சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் 2016 – 2018 வரையான காலப்பகுதிகளில் கலைத்திட்ட மறுசீரமைப்பு. பறைஇசை, நாடகப்பிரதிஎழுதுதல், பாரம்பரிய இசைக்கருவிகளை அடையாளப்படுத்தலும் உருவாக்குதலும், இசையும் படைப்பாக்கமும், கல்விசார் கல்விசாரா ஊழியர்களின் செயற்திறன்களை விருத்தி செய்தல், வர்ணங்களும் வரைதலும், உருவ வரைபுகள், வயலின் பயிற்சிகள், நிகழ்வுகளும் ஒழுங்கமைப்பும்,எரோபிக் உடற்பயிற்சிகள், தமிழர் இசை மரபுகள், தமிழர் ஆடல் மரபுகள், உள்ளுர் உணவுப் பண்பாடும் தத்துவங்களும், மொழிபெயர்ப்பும் சவால்களும் ஆகிய கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு விரிவுரையாளர்களும் மாணவர்களும் பயன்பெறும் வகையில் கல்விப்புலம் சார்ந்த அறுபதுக்கும் மேற்பட்;ட பயிற்சிப்பட்டறைகள், கருத்தரங்குகள் கலந்துரையாடல்கள் என்பன நடாத்தப்பட்டுள்ளமை கவனத்திற்குரியதாகும்.

பயிற்சிப்பட்றைகள் மாத்திரமன்றி விழாக்கள் பண்டிகைகள் நினைவுதினங்கள் போன்றவைகளும் எமது நிறுவகத்தில் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டுள்ளன. அவற்றுள் உலக நாடக தின விழா, உலக தாய்மொழிதினம், அரச நடன விழா, நிருத்தியவிழா, தியாகராஜ சுவாமிகள் உற்சவம், உலக நடன தினம், உலக இசை தினம், சுவாமி விபுலானந்தர் நினைவு தினம், கதிர்காமம் எசல பெரகரா, பேட்டல்பிரெஜ்ச் ஞாபகார்த்த தினம், நவராத்திரி விழா, சதங்கையணிவிழா, பொங்கல் விழா, தமிழிசை விழா, கலாசார விழா, சுதந்திர தின விழா போன்றவை குறிப்பிடத்தக்கன.

ஆய்வுகளும் வெளியீடுகளும்

ஒரு பல்கலைக்கழக சமூகம் ஆய்வு மாநாடொன்றை நடத்தவதற்கான தேவை யாதெனில் தமது நிறுவனம் சார்ந்த கல்விச் சமூகத்தினரின் புலமை, திறன்களை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கும் புதிய துறைசார்ந்த விடயங்களையும் சமூகத்திற்கு நன்மை பயக்கும் பயனுறுதிமிக்க ஆய்வுச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குமாகும். அந்த வகையிலேயே எமது நிறுவகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று சர்வதேச ஆய்வு மாநாடுகள் நடாத்தப் பட்டுள்ளன.எமது நிறவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சி. ஜெயசங்கரின் காலத்திலேயே இது நடைமுறைச் சாத்தியமாயுள்ளது. இதற்கு முன்னர் தேசிய ரீதியிலான இரண்டு கருத்தரங்குகள் மாத்திரமே இந்நிறுவகத்தில் நடைபெற்றுள்ளமையும்சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்..

எமது நிறுவகம் வெறுமனே ஒவ்வொரு ஆண்டும் ஓர் ஆய்வு மாநாட்டை நடாத்துவது என்ற நிலையிலிருந்து விலகி இம் மாநாட்டை நடத்துவதன் மூலம் புதிய பாடத்துறைகள் சார்ந்த புலமைகளை பல்கலைக்கழக சமூகம் பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே நடத்த முனைந்தது.எமது கலைத்திட்டத்தில் தற்போது பல புதிய பாடத்துறை சார்ந்த கற்கை நெறிகள் அறிமுகம் செய்யப்படவுள்ளதால்இப் பாடத்துறை சார்ந்த அறிவையும் புலமையையும் திறனையும் எமது கல்விப்புலம் சார்ந்தோர் மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் வகையில் இத்துறைகள் சார்ந்த அமர்வுகள் எமது ஆய்வு மாநாட்டில் ஒழுங்கு படுத்;தப் பட்டன.நிறுவகத்தின் கல்விப்புலம் சார்ந்தோர் எத்துறை சார்ந்த கற்பித்தலில் ஈடுபட உள்ளார்களோ அத்துறைசார் விடய அறிவை மேலும் வளப்படுத்திக் கொள்வதற்கான, தேடலுக்கான சந்தர்ப்பத்தை அவர்களுக்கு வழங்குகின்ற களமாக இம் மகாநாடுகள் அமைந்திருந்தன.இம் மகாநாடுகளுக்கான ஆதாரசுருதி உரைகளை நிகழ்த்துவதற்காக பிற நாட்டுப் பல்கலைக் கழகப் பேராசிரியர்களைஅழைத்ததன் மூலம் எமது நிறுவகத்தின் செயற்பாடுகள் சர்வதேசத்தவரின் பார்வைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளது.

ஆய்வு மாநாட்டிற்கு கட்டுரை சமர்ப்பித்தவர்களின் ஆய்வுச்சுருக்கங்கள் அடங்கிய தொகுப்புக்கள் மூன்றினை எமது நிறுவகம் வெளியிட்டுள்ளதுடன் ஆதாரசுருதி உரைகள், அதிதி உரைத்தொடர்களில் உரையாற்றியோரின் முக்கியத்துவம் வாய்ந்த உரைகள் முதலானவையும்; சிறுசிறு தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன. அந்தவகையில் கமீனா குணரெட்ணவின் ‘சர்வதேச சட்டமும் கட்புலனாகாப் பாரம்பரியங்களும்’;பிரெண்டா பெக்கின் ‘அண்ணமார் பொங்கல் பானை பொங்கிவழிகின்;றது’கலாநிதி சஞ்சய் கங்குலியின் ‘மேடையேற்றத்தில் பிரதியின் ஆற்றல்’ கிரன் கிறவலின் ‘அழகியலும் அரசியலும் சமத்துவ அடிப்படையின் வெளிப்படுத்தலாக கிராமியக்கலை’சிவசேகரத்தின்’சென்நெறிக் கலைகளும் கிராமியக்கலைகளும்’எலிசபெத் டீன் ஹேமானின் உரை ஆகியவை தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன.

எமது நிறுவகத்தில் இசைத்துறை விரிவுரையாளராகக் கடமையாற்றி அமரத்துவமடைந்த வேல்முருகு சிறிதரன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டினையும் எமது நிறுவகம் நிறைவேற்றியுள்ளது.இம் மூன்று வருட காலப்பகுதிக்குள் 2016, 2017ல் இரண்டு செய்திமடல்களும் வெளியிடப்பட்டுள்ளன. 2018க்கான செய்திமடல் வெளியிடத்தக்க நிலையில் அனைத்து செயற்பாடுகளும் பூரணப்படுத்தப் பட்டுள்ளன. எமது நிறுவகத்தின் விரிவுரையாளர்களின் ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய ‘ஆற்றல்’எனும் ஆய்விதழ் 2019ல் வெளிவரவுள்ளது. அதற்கான செயற்பாடுகள் யாவும் நிறைவடைந்துள்ளமையும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.

நிறுவகத்தின் நலனோம்பு நடவடிக்கைகள்
எமது நிறுவகத்தில் பணிப்பாளரின் இடையறாத முயற்சியினால் பல்கலைக்கழக கூட்டுறவு உணவுச் சாலை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழக கூட்டுறவு உணவுச்சாலை என்பது சாதாரணமாக இலங்கைப் பல்கலைக்கழகங்களில் இயங்கி வரும் உணவுச் சாலைகளைப் போலன்றி அவை எமது சமூகத்தின் பாரம்பரிய உணவுகளையும் பண்பாடுகளையும் பிரதிபலிக்கும் வகையிலான உணவுகளை மாணவர்களுக்கு வழங்க முனைவதுடன் பல்கலைக்கழக சமூகத்தின் உடல் ஆரோக்கியத்தையும் வலிமையையும் மேம்படுத்தும் வகையிலான உணவுகளை தயார் செய்கின்றது.

எமது உள்ளுர்ப் பாரம்பரியம் பண்பாடு கலாச்சாரம் என்பன மறைந்து போய் எமது உணவுப் பழக்கத்திற்கான அடையாளங்களையே நாம் இழந்து மேலைத்தேச உணவு வகைகளுக்கும் பானங்களுக்கும் அடிமையாகிப் போயுள்ளோம். எமது பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் மீட்டெடுக்கும் முயற்சியில் எமது உணவு முறைகளை எமது வருங்கால சந்ததியினருக்கு நாம் கையளிப்பதன் மூலம் எமது உள்ளுர் உணவுக் கலாச்சாரத்தைப் பேண முடியும்.

இவ் உணவுச் சாலை உடல் ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும் எந்தவிதமான மசாலாக்களையும் சுவையூட்டிகளையும் பயன்படுத்துவதைத் தவிர்த்து எமது உள்ளுர் உணவுகளுக்கே முதன்மையளிக்கிறது. தேவையற்ற கொழுப்புணவுகளை தவிர்ப்பதுடன் சுவையும் ஆரோக்கியமும் உடைய எமது பாரம்பரிய உணவுகளை தயாரித்து அளிக்கின்றது. இவ் உணவுச்சாலையில் தரமானதும் சுவையானதும் சுகாதாரமானதுமான உணவுகளைப் பெற முடிகின்றது. எமது நிறுவகத்தின் முன்மாதிரியான உணவுச்சாலையாக இவ் உணவுச் சாலையை விரிவுபடுத்துவதன் மூலம் இதனை கற்றலுக்கான ஒரு செயன்முறைப் பயிற்சி நிலையமாகவும் வடிவமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

எமது நிறவகத்தில் கட்புல தொழிநுட்பத்துறை சார்ந்த மாணவர்களின் படைப்பாக்கங்களை காட்சிப்படுத்துவதற்கம் அவர்களது கலைப்படைப்புக்கள் மற்றும் கைவினைப் பொருட்களை விற்பனை செய்வதற்கும் ஏற்ற வகையில் கலை, கைவினைப் பொருட்களின் விற்பனை நிலையம் ஒன்றும் கலைஞர் கிராமம் ஒன்றும் அமைக்கப்பட்டிருப்பதுடன் அவற்றினை நிர்வகிப்பதற்காக இணைப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளமை சிறப்பிற்குரியதாகும்.

சான்றிதழ் கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்பட்டமை

எமது நிறுவகத்தில் தற்போது மேலதிக கற்கைகள் பிரிவினூடாக பல்வேறு சான்றிதழ்க் கற்கை நெறிகளை ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிரக்கின்றன. இப்பிரிவிற்கென இணைப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதுடன் கற்கை நெறிகளுக்கான வளவாளர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் யாவும் கோரப்பட்டுள்ளதுடன் இம்மாத நடுப்பகுதியளவில் கற்கைநெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்து. தகவல் தொழில்நுட்பம், ஆங்கிலம், மொழிபெயர்ப்பு, ஆடைவடிவமைப்பு,உள்ளுர் உணவுக் கற்கைகள், பண்ணிசை, மலர்அலங்கார வடிவமைப்பு, யாப்பிலக்கணப் பயிற்சி முதலான பல்துறைசார் சான்றிதழ் கற்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இக்கற்கைநெறிகளைத் தொடர்வதன்மூலம் பல்கலைக்கழக அனுமதிகளைப் பெறாத பல மாணவர்களும் பல்கலைக்கழகங்களுக்குள் வந்து கல்விகற்கும் வாய்பைப் பெறுவர்.

ஆளணியினரின் அதிகரிப்பு

எமது நிறவகத்தின் ஆளணியும் கடந்த மூன்றாண்டுகளில் அதிகரிக்கப்பட்டுள்ளமையை அவதானிக்கலாம். 2016ல் ஐம்பத்து நான்காக இருந்த கல்விசார் பணியாளர்களின் எண்ணிக்கை 2018ல் எழுபத்து இரண்டாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் கல்விசாரா ஊழியர்கள் மற்றும் நிர்வாக உத்தியோகஸ்தர்களின் எண்ணிக்கையும் 47ல் இருந்து 54 ஆக கணிசமான அளவில் அதிகரித்துள்ளமையை அவதானிக்கலாம்.

பௌதீக வளங்களின் அதிகரிப்பு

எமது நிறுவகத்தின் கலைஞர் கிராமமும் கலை கைவினைப் பொருட்களின் விற்றனை நிலையமும் ஸ்தாபிப்பதற்காக பூநொச்சிமுனையில் ஐந்து ஏக்கர் காணி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன் விளையாட்டு நிகழ்வுகளுக்காகவும் ஐந்து ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளது. எமது நிறுவகத்தின் உரித்துடைமையைக் கூறும் காணி உறுதிப்பத்திரமும் எமது பணிப்பாளரின் முயற்சியினாலேயே பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளமை கவனத்திற்கொள்ளத்தக்கது.

இவை மாத்திரமன்றி எமது சிற்றுண்டிச்சாலை புனரமைக்கப்பட்டுள்ளதுடன் நூலக கட்டிடம், புதிய பல்நோக்குக் கட்டிடத் தொகுதி, கட்புல தொழிநுட்பத் துறைகளுக்கான கட்டிடம் பேன்றனவும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. நிறுவகத்தின் உள்ளக வீதிகள் திருத்தியமைக்கப்பட்டு பாதையோரங்களில் அழகு தரும் மரங்களும் பயனுறுதிமிக்க பாரம்பரிய மரங்களும் நடப்பட்டுள்ளன. இயற்கைச் சாயம் பெறப்படும் ரம்மியமான அழகுத் தாவரங்களும் மருத்துவக் குணம் மிக்க மரங்களும் நடப்பட்டுள்ளன. சூழலுக்கும் மண்வளத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் மரங்கள் அகற்றப்பட்டு சூழல் நேயத் தாவரங்கள் நடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவை மட்டுமல்லாது பல்வேறு நாடுகளின் பல்கலைக்கழகங்களுடன் இடைவினைத் தொடர்புகளை ஏற்படுத்தி எமது நிறுவக மாணவர்களும் விரிவுரையாளர்களும் பயன்பெறும் வகையில் நிகழ்ச்சித்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், மதுரைக்காமராஜர் பல்கலைக்கழகம்,மனேன்மணிம் சுந்தரனார் பல்கலைக்கழகம், காந்தி கிராம் பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி பிரெஞச் நிறுவகம் போன்றவற்றுடன் இணைத் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே எமது நிறுவகத்தின் கடந்த மூன்றாண்டுகால அபிவிருத்திச் செயற்பாடுகளை நோக்கினால் இது முன்னர் எக்காலத்திலும் அடையாத பாரிய வளர்ச்சியைப் பெற்றுள்ளதுடன் சர்வதேச அளவில் பேசப்படும் ஒரு நிறுவகமாகவும் வளர்ச்சி பெற்றுள்ளது எனக் கூறலாம். ஒரு நிறுவகத்தின் உயர்ச்சியும் வீழ்ச்சியும் அந் நிறுவகத்தின் தலைமைத்துவத்ததையே சாரும். அர்ப்பணிப்பும் கடமையுணர்வும் புரிந்துணர்வும் கட்டுப்பாடும் பொறுப்புணர்வும் மிக்க தலைவராக எமது நிறுவகப் பணிப்பாளர் திகழ்வதால் எமது நிறுவகம் தனது தூரநோக்கின் எல்லைகளைத் தொடும் என்பதில் எதுவித ஐயத்திற்கும் இடமில்லை.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More