Home இலங்கை “சாரை எண்டால் ஒடிப்போய் ஒளிக்கும். விஷப் பாம்பெண்டால் நிண்டு கடிக்கும்”

“சாரை எண்டால் ஒடிப்போய் ஒளிக்கும். விஷப் பாம்பெண்டால் நிண்டு கடிக்கும்”

by admin

சனி முழுக்கு 21  – பொஸிற்றிவ் பொன்னம்பலம்.

“அண்ணை. வடிவா சமைச்சுச் சாப்பிட்டு ஆரோக்கியமா இருந்த  எங்களை, என்ரை மனிசீன்ரை தங்கைக்காரி வந்து குழப்பிப் போட்டுப் போட்டாள்” எண்டு நேற்றைக்கு வந்து  அன்னம்பாறிப்போட்டுப் போறார் சோமர்.

உண்மைதான் சோமர் ஒரு பழமைவாதி. எல்லாத்தையும் அண்டு எப்பிடிச் செய்தமோ? அப்பிடியே செய்ய வேணும் எண்டு சிந்திக்கிற மனுசன். அவர் வீட்டை இப்ப அஞ்சாறு  மாசத்துக்கு முன்னம்  வெளிநாட்டிலை இருந்து அவற்றை மச்சாள்காரி அவளின்ரை குடும்பத்தோடை வந்து நிண்டவள். அவளுக்கும் வயது அங்கை வட்டுக்கை போட்டுது. இருந்தாலும் சோமற்றை மனுசியோடை பாக்கேக்கை வெளித்தோற்றம் குமரி மாதிரிப் பூச்சும், உடைநடையும். ஆனால் சோமற்றை மனுசி இண்டைவரை ஒரு குளிசை போட்டு அறியாது. அவளின்ரை  சகோதரியோ  சரை  சரையா ஒரு பத்து விதமான குளிசைப் பெட்டியோடைதான் வந்திறங்கினவள். “பெட்டி ஏன்” எண்டு கேட்டதுக்கு “குளிசையளை மறக்காமல் போடுறதுக்கு” எண்டு சொன்னா.அதுவும் ஞாயிறு தொட்டு சனிவரை என்னென்ன குளிசையைப் போட வேணுமெண்டு ஒரு மாதக் கணக்குக் அடுக்கி வைக்கக் கூடிய அமைப்பிலை அந்த மருந்துப் பெட்டியைக் கண்டன். முன்னம் எங்கடை ஆட்கள் பாவிச்ச  அஞ்சனப் பெட்டிமாதிரி. அது பனைச்சாரிலை பின்னின வடிவான பெட்டி. இது அவள் கொண்டு வந்தது அதைவிடச் சின்னன். பிளாஸ்ரிக்கிலை செய்த  கண்ணாடிப் பெட்டி.. அப்ப அஞ்சனப் பெட்டியைச் சரக்குச் சாமான்களை மறந்து போகாமல் கறிக்குப் போடவேணுமெண்டதுக்காகச் சுத்தமாக்கிப் பரிகரிச்சுப் பாதுகாக்க வைச்சிருந்தம். இப்ப அதே மாதிரியான ஒரு பெட்டியை வாங்கி மருந்துக் குளிசையைப் பாதுகாத்து மறக்காமல் வைச்சிருக்க வேணும் எண்டதுக்காகப் பாவிக்கிறம். எப்பிடி உலகம்?  நோக்கம் ஒண்டுதான். ஆனால் பொருட்களும், உபயோகமும் மாறிப் போச்செல்லே?

அப்ப அவள் தான் வந்து நிக்கேக்கை இவை அடுப்பிலை ஊதி ஊதிச் சமைக்கிறதைப் பாத்திட்டு, அவையளைப் பேசிப் போட்டுப் போய் ஒரு காஸ் அடுப்பை வாங்கிக் கொண்டு வந்து சமைச்சவளாம். போயேக்கை “அக்கா இதை நீ இனிமேல் பாவி. எத்தினை நாளைக்கு ஊதி ஊதிச் சமைக்கப் போறாய்? ஊத ஊத நெஞ்சுக்கை வருத்தம் வந்திடுமெல்லே.” எண்டு சொன்னவளாம். ஆனால் சோமற்றை மனுசி சோமற்றை சொல்லுக்கை நிக்கிற ஆள். அதாலை அதை அப்பிடியே வைச்சிட்டு வழமையாச் சமைக்கிற மாதிரித்தான் இப்பவும் சமைக்கிறவவாம்.

ஆனால் சோமருக்கு அந்த காஸ் சிலிண்டரையும், அடுப்பைப் பாக்கப் பாக்க ஒருபக்கம் அருவருப்பும், மற்றப் பக்கம் பயமாவும் கிடந்ததெண்டு சொன்னார்.  மச்சாள்காரி வேண்டி வைச்சதெண்டு ஒரு மாதிரிச் சமாளிச்சக் கொண்டு வந்தவர், இப்ப இரண்டு கிழமைக்கு முன்னம் கொழும்பிலை ஒரு மனுசி காஸ் கசிஞ்சு கிடந்ததைத் தெரியாமல் வந்து லைற்றைப் போடேக்கை அது பத்தி வெடிச்சுச் செத்ததெண்டு பேப்பரிலை வந்ததை வாசிச்சவுடனை  வீட்டை வந்து முதல் செய்த வேலை, தண்ணிப் பைப்புத் திருத்திற குமாரதாசனைக் கூட்டிக் கொண்டு வந்து காஸ் அடுப்பைப் பக்குவமாக் கழட்டி வைச்சிட்டுப் போய் கொத்துரொட்டிக் கடைக்காரனிட்டை சொன்னராம் “காஸ் அடுப்பு ஒண்டு கிடக்கு. செற்றாத்தான் விக்கப் போறன். வந்து பாத்து  விருப்பமெண்டால் எடு” எண்டு.அவனும் வந்து பாத்திட்டு விலை குறைவாத்தான் கேட்டவனாம். “தரித்திரம் துலைஞ்சால் காணும் ” எண்டு தான் மனசுக்கை நினைச்சுக் கொண்டு குடுத்துத் துலைச்சுப் போட்டன் எண்டார்  சோமர்.

அப்ப பாருங்கோ.இதை பஞ்சதந்திரக் கதையள் மாதிரிக் கதைக்க வேண்டிக் கிடக்கு. எட சும்மா இருக்கிற ஆக்களின்ரை தலையிலை சுமையை ஏத்தாதையுங்கோ. சிவனே எண்டு தானும் தன்பாட்டிலை இருக்கிற ஆக்களுக்கு வலிஞ்சு போய் கேடு கெட்ட பழக்கத்தைப் பழக்கித் தான் உழைக்கிறதுக்காக அவையளை பழுதாக்கிறது உந்த கோப்பேற் கொம்பனியளின்ரை பழக்க மேல்லெ? அவைதான் தங்கடை பொருள் பண்டங்களை  விக்கிறதுக்காகச் செய்யிற வியாபாரச் சூத்திரம். அதுக்கு எடுபட்டு போற மாதிரி எங்கடை ஆக்களின்ரை பேய்ப் புத்தியும் இருக்கு.

இப்ப சேமற்றை கதையை எடுங்கோவன். அவற்றை மச்சாள்காரி வந்து நிண்டவ. அக்கா உது மாதிரி அடுப்பிலையும், மண் சட்டியிலையும் சமைச்ச சமையலைத் திண்டு, குடிச்சுக் கன நாளாப் போச்சுது எண்டு சொல்லி நல்ல கத்திரிக்காய் சந்தையிலை போய் வேண்டிக் கொண்டு வந்து ஒரு சரக்குக் கறியை வைச்சுத் திண்டு தன்னோடை வந்த பிள்ளை குட்டியளுக்கும் “இதுதான் எங்கடை ஆரோக்கியத்தின்ரை இரகசியம்” எண்டு காட்டிக் குடுத்திருக்கலாம். இல்லை அதுகள் மச்சம்தான் தின்னப் போறம் எண்டு சொல்லி ஒற்றைக் காலிலை நிண்டால் சாவக்காடு போய் நல்ல விளைக் குட்டியளை வேண்டிக் கொண்டு வந்து சரக்குக் கறி வைச்சுக் குடுத்துச் சாப்பிட்டிருக்கலாம்.

இது அப்பிடி இல்லை. அங்கை போனாலும் நூடில்ஸ், பிஸ்ஸா, கேஎவ்சி எண்ட கேவலம் கெட்ட சாப்பாடு. இஞ்சை வந்தும் அதுதான் எண்டால் பேன் இஞ்சை வாறியள்? கேட்டால் சொந்த பந்தத்தைப் பாக்க வாறம்.கோயில் குளம் போய் நேத்தி செய்ய வாறம் எண்டு சொல்லுறியள். ஆனால் வாறனியள் வந்து உங்களையும், கெடுத்து ஊரையுங் கெடுத்துப் போட்டுப் போற மாதிரியான செய்கையளையெல்லே செய்துவிட்டிட்டுப் போறியள். காசோடை வாறனியள் திரும்பத் திரும்பக் கோயிலை கட்டுறம், புதுப்பிக்கிறம் எண்டு தேவை இல்லாத வேலை ஒரு பக்கம். கொஞ்ச நஞ்சத்தோடை வாறனியள் இஞ்சை உள்ள பெடி பெட்டையளுக்கு அரையும் குறையுமா உடுப்பைப் போடப் பழக்கி, கடற்கரைக்கும், படத்துக்கும், கொத்து ரொட்டிக் கடைக்கும் எண்டு கூட்டிக் கொண்டு குட்டிச் சுவராக்கிப் போட்டுப் போயிடிறியள். கேட்டால் சொந்த பந்தங்களை ஆசுவாசப்படுத்திறம், வந்து நிக்கிற நாட்களிலை “ஒரு வித்தியசமான உலகத்தை அதுகளுக்குக் காட்டிப் போட்டுப் போறம்” எண்டு அதுக்கொரு விளக்கம் சொல்லுறியள். அரை குறை உடுப்புப் போடக் காட்டிக் குடுக்கிறதும், அவை அவையின்ரை கலாசாரப் பண்பாடுகளைத் துலைக்கிற மாதிரியான செய்கையளைக் காட்டிக் குடுக்கிறதுந்தான் வித்தியாசம் எண்டு நீங்கள் நினைக்கிறியள். அதை, அதை, அதாக வாழ விடுங்கோ. அவை அவையளை அவை பாட்டுக்குச் சீவிக்க விடுங்கோ. புதுமையைக் காட்டுறம், புத்தியை வளர்க்கிறம் எண்டு  சொல்லிப் போட்டுப் புத்துக்கை பேசாமல் கிடக்கிற பாம்மை எடுத்து வெளியிலை விட்டிட்டுப் போகதையுங்கோ. அது சாரையெண்டால் ஒடிப் போய் ஒளிக்கும். விசப் பாம்பெண்டால் ஆக்களுக்குக் கடிக்கும்.

  • பொஸிற்றிவ் பொன்னம்பலம்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More