வங்கக் கடலில் உருவாகியுள்ள பெதாய் புயல், இன்று திங்கட்கிழமை காக்கிநாடாவில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் தென்கிழக்கு வங்கக் கடல், இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று, நேற்றையதினம் பெதாய் என்ற புயலாக மாறியிருந்தது.
இந்த புயல் மத்திய மேற்கு, தென்மேற்கு வங்கக் கடலில் இருந்து வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருவதாகஇந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று இந்த புயல் காக்கிநாடாவில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் புயலின் தீவிரம் குறைந்து மணிக்கு 70-90 கி.மீ. என்ற வேகத்தில் கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
கரையைக் கடந்த பின்னர் இது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாகவும், அதன்பின் காற்றழுத்தத் தாழ்வாகவும் மாறும் என எதிர்பார்க்கப்படுவதனால் ஆந்திர கடலோரப்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் எனவும் இதனால் சில பகுதிகள் பாதிப்புக்கு உள்ளாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வட தமிழகம், தெற்கு ஆந்திரா மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் ஆந்திர மாநிலத்தில் மீன்பிடிச் செயல்பாடுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் இன்று ஆந்திரா, வட தமிழகம், புதுச்சேரியில் இருந்து தென் மேற்கு, மத்திய மேற்கு வங்கக் கடலில் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.