குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பித்தளைத் தாலியைக் கட்டி பெண்ணொருவரைத் திருமணம் செய்த நபர் பதிவுத் திருமணத்துக்கு ஏற்பாடு செய்த போது அங்கிருந்து தப்பி செல்ல முற்பட்ட வேளை டிவிட்உறவினர்களால் மடக்கிப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் வடமராட்சி பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்று உள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வடமராட்சி பிரதேசசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு தரகர் மூலம் கொழும்பில் வசிக்கும் நபர் ஒருவர் மணமகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திருமணத்துக்கு முன்னர் சீதனமாக 5 லட்சம் ரூபா பெண் வீட்டார் மாப்பிளைக்கு கொடுத்துள்ளனர்.கடந்த வெள்ளிக்கிழமை செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் திருமணம் நடைபெற்றது.
தாலி கட்டிய பின்னர் பதிவுத் திருமணத்துக்கு தயாராகுமாறு பெண் வீட்டார் மாப்பிளையை அழைத்துள்ளனர்.அவசரமாக கொழும்புக்குச் செல்ல வேண்டும் ஆகவே பதிவுத் திருமணம் வேண்டாம் என்று மாப்பிள்ளை மறுத்துள்ளார்.
அதன் போது பெண் வீட்டாருக்கு சந்தேகம் ஏற்பட்டு மணப்பெண்ணுக்கு கட்டிய தாலியைப் பார்த்த போது அது பித்தளை என்று தெரியவந்தது. அதனை அடுத்து மாப்பிள்ளையை மடக்கி பிடித்து வல்வெட்டி துறைப் காவல்துறையினரிடம் பெண் வீட்டார் ஒப்படைத்தனர்.
மாப்பிள்ளை ஏற்கனவே கொழும்பில் திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகளின் தந்தை என்றும் ,பெண்ணுக்கு தோழியாக வந்தவர் மாப்பிள்ளையால் பணம் கொடுத்து வவுனியாவில் இருந்தும் அழைத்து வரப்பட்டவர் என்றும் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
அதனை அடுத்து திருமணப் பெண்ணின் எதிர் காலத்தை கொண்டு விடயத்தைப் பெரிது படுத்தாமல் சீதனமாகக் கொடுத்த பணத்தை மாப்பிளையிடம் இருந்து வாங்கித் தருமாறு பெண் வீட்டார் காவல்துறையினருக்கு கூறியுள்ளனர்.
அதனை அடுத்து மாப்பிள்ளையாக வந்தவர் அந்தப் பணத்தை மீண்டும் பெண் வீட்டாருக்கு ஒப்படைத்து விட்டு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.