குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
கல்லுமலை ஆலய வளாகத்தில் தொல்லியல் திணைக்களத்தினரால் பௌத்த விகாரை அமைக்கும் முயற்சி மேற்கொண்டமை காரணமாக அப்பிரதேசத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் வவுனியா சமளங்குளம் கல்லுமலை விநாயகர் கோவிலில் பிரதேச மக்களுக்கும் தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்களுக்குமிடையில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
வவுனியா, சமளங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலயம் அப் பகுதி மக்களால் காலம் காலமாக வழிபாடு செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலைளில் குறித்த ஆலயம் அமைந்துள்ள மலையில் தொல்பொருள் சின்னங்களான பண்டைய கற் தூண்கள், பாழடைந்த செங்கல் படிவங்கள், கட்டடங்கள் என்பன கொண்டுவரப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களிற்கு முன்னர் தொல்பொருள் திணைக்களத்தினால் கல், மணல் மற்றும் பல கட்டடப்பொருட்கள் இவ்வளாகத்தில் இறக்கி தமது வேலைகளை முன்னெடுத்திருந்த நிலையில் பொதுமக்களினால் இவ்வேலைகளை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தமையினையடுத்து குறித்த வேலைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
அதன் பின்னர் நேற்று மீண்டும் தொல்பொருள் திணைக்களத்தினால் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு அவர்களின் பாதுகாப்புடன் வேலைகள் ஆரம்பக்கப்பட்ட நிலையில் அவ்விடத்திற்கு சென்ற கிராமவாசிகள் தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்ததுடன் வேலைகளை இடைநிறுத்துமாறும் கூறியிருந்தனர்.
இதேவேளை சம்பவ இடத்திற்கு முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம், நகரசபை உறுப்பினர் சந்திரகுலசிங்கம் ஆகியோர் வருகைதந்து இது தொடர்பாக அப்பிரதேச மக்களுடனும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளிடனும் கலந்துரையாடியிருந்தனர்.
இதன்போது இதனை புனரமைப்பு செய்யலாமே தவிர புதிதாக கட்ட முடியாதெனவும், தற்போது வேலைகளை நிறுத்துமாறும் கூறியதன் அடிப்படையில் தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்கள் அவ்விடத்தில் இருந்து விலகி சென்றிருந்தனர்.