தேசிய அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு விலகியதன் காரணமாக பாராளுமன்றத்தில் தற்போது பெரும்பான்மை ஆசனங்களை கொண்டுள்ளதனால் அதன் பாராளுமன்ற குழு தலைவர் மஹிந்த ராஜபக்ஸவை எதிர்க்கட்சி தலைவராக நியமிப்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
பாராளுமன்றம் இன்று பிற்பகல் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. இதேவேளை,ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களாக விஜித் விஜிதமுனி சொய்ஸா, இந்திக பண்டாரநாயக்க மற்றும் லக்ஷ்மன் செனவிரத்ன ஆகியோர் ஆளுங் கட்சி ஆசனத்தில் அமர்ந்துள்ளனர்.
அத்துடன் அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர் பியசேன கமகே இன்று ஆளுந்தரப்பில் அமர்ந்து கொண்டார். சபை நடவடிக்கைகளின் ஆரம்பத்தில் சபாநாயகர் புதிய எதிர்க்கட்சித் தலைவர், புதிய ஆளுந்தரப்பு பிரதான கொறடா மற்றும் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் ஆகிய பதவிகளுக்காக பெயரிடப்பட்டவர்களை அறிவித்தார்.
இதேவேளை, பாராளுமன்றத்தில் ஆளும் தரப்பு பிரதான கொறடாவாக ஐக்கிய தேசியக் கட்சியின் லக்ஷ்மன் கிரியெல்லவும், எதிர்க்கட்சியின் பிராதம கொறடாவாக ஐ.ம.சு.கூ பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீரவும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.