பெல்ஜியத்தில் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணி கட்சி விலக்கிக்கொண்டதையடுத்து, அந்நாட்டு பிரதமர் சார்லஸ் மைக்கேல் பதவிவிலகியுள்ளார்.
உலகளாவிய அகதிகள் குறித்த ஐ.நா ஒப்பந்தம் தொடர்பாக எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக, அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, புதிய பிளெமியம் கூட்டணி விலக்கியிருந்தது. இதனால் பிரதமர் சார்லஸ் அரசு சிறுபான்மை அரசாக மாறியதன் காரணமாக அவர் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதனால் பிரதருக்கெதிராக பாராளுமன்றத்தில், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ள நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ள விரும்பாத பிரதமர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
பிரதமர் மைக்கேல் தனது பதவிவிலகல் கடிதத்தினை மன்னர் பிலிப்பிடம் ஒப்படைத்துள்ள நிலையில் அதனை ஏற்பதா இல்லையா என்பது குறித்து மன்னர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் வரை பிரதமர் மைக்கேலை பதவியில் இருக்குமாறு மன்னர் கேட்டுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன