ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் கோரிக்கையைச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி தூத்துக்குடி மக்கள் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமை தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டதுடன் மூன்று வாரங்களில் ஆலையைத் திறப்பதற்கான அறிவிப்பாணை வெளியிட வேண்டுமென தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்குப் பல்வேறு கட்சிகளும் மக்கள் நல அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்தநிலையில் நேற்றுக் காலை முதல் தூத்துக்குடியில் உள்ள வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டது. சில வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றச் சென்ற மக்களைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட போதிலும் கறுப்புக் கொடி ஏந்தியபடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்பினர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது குறித்து தமிழக அரசு சட்டமன்றத்தைக் கூட்டி கொள்கை முடிவு எடுத்து சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, வருகிற 21ஆம் திகதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.