சிரியாவில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பை தோற்கடித்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்ததையடுத்து, அங்கிருந்து தனது படைகளை அமெரிக்கா திரும்ப பெற்று வருகிறது. வடகிழக்கு சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கெதிரான நடவடிக்கையில் சுமார் 2,000 அமெரிக்கப் படையினர் உதவி செய்து வந்தனர்.
இந்நிலையில் சிரியாவில் ஐஎஸ் அமைப்பினர் வீழ்த்தப்பட்டுவிட்டனர் எனவும் சிரியாவில் வரலாற்று வெற்றிகளை பெற்றுள்ள அமெரிக்க துருப்புகளை நாட்டுக்கு மீண்டும் அழைக்க இதுவே சரியான நேரம் எனவும் டிரம்ப் டுவிட்டர் தளத்தில் வீடியோ பதிவு செய்திருந்தார்.
இதனையடுத்து சிரியாவில் இருந்து தனது படைகளை அமெரிக்கா திரும்ப பெற்றுவருவதாகவும் இது தொடர்பாக தாங்கள் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து கொண்டிருப்பதாகவும் அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
இதேவேளை டிரம்ப் கூறுவது போல் சிரியாவில் ஐஎஸ் அமைப்பினர் தோற்கடிக்கப்படவில்லை என கூட்டுப்படையில் இடம்பெற்றுள்ள பிரித்தானியா தெரிவித்துள்ளது.
சிரியாவில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றமானது அமெரிக்கா கூறுவதுபோல் உலகளாவிய கூட்டுப்படைக்கோ அல்லது அதன் நடவடிக்கைகளுக்கோ முற்றுப்புள்ளி வைப்பதற்கான அடையாளம் அல்ல எனவும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவதற்கு கூட்டுப்படை உறுப்பினர்கள் தொடர்ந்து செயல்பட வேண்டும் எனவும் பிரித்தானியா தெரிவித்துள்ளது