கடந்த ஐம்பது நாட்களில் 950 மில்லியன் டொலர்கள் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளதெனவும் இது நாட்டில் இடம்பெற்ற பாரிய துரோகச் செயலாகும் என அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால கணக்கறிக்கை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்
ராஜபக்ஸ அரசாங்கம் கடந்த 2015ஆம் ஆண்டில் இருந்து ஆட்சி செய்து வந்த காலப்பகுதியில் 100க்கும் அதிகமான அமைச்சர்கள் இருந்தனர். இவர்கள் அந்தக் காலப்பகுதியில் மக்களுக்கு எவ்வாறான நிவாரணம் வழங்கினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். கடந்த 50 நாட்களுக்கு முன்னர் சதித்திட்டத்தினால் ஆட்சிக்கு வந்து எரிபொருட்களின் விலை குறைத்தும் சில வரிகளை குறைத்தும் மக்களுக்கு நிவாணம் வழங்கியதாக தெரிவிக்கின்றனர்.
ஆனால் இவர்களின் 10வருட ஆட்சியில் எரிபொருட்களின் விலை எந்த இடத்தில் இருந்தது என்பதை மறந்துள்ளனர். அதேபோன்று எரிபொருட்களின் விலையை குறைக்குமாறு நீதிமன்றம் வழங்கிய உத்தரவையும் மதிக்காமல் செயற்பட்டனர்.
தற்போது எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு பொது மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை விடும் அவர்கள் 2015 தாங்கள் ஆட்சிக்கு வரும்போது நாட்டின் அனைத்து துறைகளும் எவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தன என்பதனை மறந்து விட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அரசியல் சதித்திட்டத்தால் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பை நிவர்த்திசெய்ய இன்னும் இரண்டு வருடங்கள் செல்லும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்