சூடானில் பாணின் விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறைகளில் இதுவரை 19 பேர் கொல்லப்பட்டதுடன் 219 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அங்கு பாண் உற்பத்திக்கான அரச மானியங்கள் நிறுத்தப்பட்டதால், பாணின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் அதற்கெதிராக சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சியினருடன் இணைந்து பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 19ம் திகதி முதல் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் போராட்டக்காரர்கள் பல்வேறு பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், கடைகளை சூறையாடி அங்குள்ள பொருட்களை போராட்டக்காரர்கள் கொள்ளையடித்துச் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து போராட்டக்காரர்களை ஒடுக்க கலவர தடுப்பு பிரிவு காவல்துறையினர் மேற்கொண்ட கடும் நடவடிக்கைகளையடுத்து போராட்டக் காரர்களுக்கும் காவல்துறையினருக்குமிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த வன்முறைப் போராட்டங்கள் மற்றும் காவல்துறையினரின் நடவடிக்கைகளில் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதில் இருவர் பாதுகாப்புப்படையினர் எனவும் அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து எதிர்வரும் நாட்களில் போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் எனவும், பொதுமக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. ஜனாதிபதி; ஒமர் அல் பஷீர் தலைமையிலான அரசாங்கத்தை தூக்கி எறியும் வரை போராட்டத்தை தொடரவேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
இந்தநிலையிலி போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழல் உருவாகியிருப்பதால் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை போராட்டக்காரர்களுக்கு எதிரான அடக்குமுறை மற்றும் வன்முறைகளால் கடும் அதிருப்தி அடைந்த வடக்குமாநிலத்தைச் சேர்ந்த ஒரு அமைச்சர் ஒருவர் பதவிவிலகியுள்ளதாகவும் இது ஆளும் கூட்டணிக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது