படகுகளில் பொருத்தப்படும் இயந்திரம் எதுவும் இல்லாமல், பெருங்கடலின் நீரோட்டங்களை பயன்படுத்தி அமைக்கப்பட்ட கொள்கலன் மூலம் 4500 கிமீ தூரத்தை பிரான்ஸைச் சேர்ந்த 71 வயது ஜீன்-ஜாக்குவஸ் சவின் என்பவர் கடக்க ஆரம்பித்துள்ளார்.
ஸ்பெயினின் கனரி தீவுகளில் ஒன்றான எல் ஹியர்ரோ தீவில் இருந்து புறப்பட்டுள்ள அவர் அடுத்த மூன்று மாதங்களுக்குள் கரீபியன் தீவுகளை அடையமுடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்த கொள்கலனுக்குள் உறங்குவதற்கு தனி இடம் அமைக்கப்பட்டுள்ளதுடன் சமையலறை மற்றும் பொருட்களை வைப்பதற்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அட்லாண்டிக் கடலடியின் நீரோட்டங்கள் குறித்து கடலியலாளர்கள் அறிவதற்காக, ஜீன்-ஜாக்குவஸ் சவின் தான் செல்லும் வழியில் அடையாளங்களை போட்டுவிட்டுச் செல்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
தனது பயணம் குறித்த மேலதிக தகவல்களை தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்டு வரும் அவர் கடைசியாக வெளியிட்ட ஒரு பதிவில் கொள்கலன் நன்றாக ஒத்துழைக்கிறது எனத் தெரிவித்துள்ளார். ஜீன்-ஜாக்குவஸ் சவின் ஒரு முன்னாள் ராணுவ பாராசூட் வீரர் என்பதுடன் வனச்சரக அலுவலராகவும், விமானியாகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.