வடக்கு கிழக்கில் இராணுவத்தின் வசமுள்ள சகல காணிகளையும் இவ்வருட இறுதிக்குள் விடுவிக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற இன்னும் ஒரு நாள் மாத்திரமே உள்ள நிலையில் ஜனாதிபதி தனது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடக்கு கிழக்கில் நிலவும் காணிப் பிரச்சினைகள் தொடர்பில், நில உரிமைக்கான மக்கள் கூட்டணி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியிருந்தது. ஜனாதிபதி அளித்த வாக்குறுதிக்கு அமைவாக, டிசம்பர் 31இற்குள் வடக்கு கிழக்கில் சகல காணிகளையும் விடுவித்து அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென அதில் வலியுறுத்தியிருந்தது.
யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்களாகின்ற போதும், தமது நிலங்களை விடுவிக்காமல் இராணுவம் ஆக்கிரமித்திருப்பது தொடர்பாக அதிருப்தி வெளியிட்டுள்ள மக்கள், தம்மை நிரந்தரமாக மீள்குடியேற்ற வேண்டுமென வலியுறுத்தியிருந்தனர். அதன்படி, வடக்கு கிழக்கிலுள்ள காணிகளை முழுமையாக விடுவிக்க சம்பந்தப்பட்ட தரப்பிடம் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளாரென கடந்த ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வடக்கு கிழக்கில் இராணுவத்தினரின் அபகரிப்பில் 14,769 ஏக்கர் காணிகள் இருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதியின் அறிவிப்பின் பிரகாரம், 263.56 ஏக்கர் காணிகளை மாத்திரம் விடுவிக்கவுள்ளதாக படைத்தரப்பினர் கூறியிருந்தனர். அத்துடன் தம் வசம், வடக்கில் 12,200 ஏக்கர் அரச காணிகளும் 2,569 ஏக்கர் தனியார் காணிகளும் இருப்பதாகவும் படைத்தரப்பினர் கடந்த மாதம் தெரிவித்திருந்தனர்.
இதேவேளை காணி விடுவிப்பு தொடர்பில் வடக்கு மாகாண ஆளுனர் வெளியிட்ட அறிவுறுத்தலின் அடிப்படையில், புதிய ஆண்டுடின், ஜனவரி மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் மேலும் 1,099 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படுமென இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க குறிப்பிட்டிருந்தார்.
வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் இராணுவத்தின் காட்டுப்பகுதியிலுள்ள நிலங்களே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தன.
இதேவேளை போரின் பின்னர், கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதியளவில் 84,524 ஏக்கர் நிலத்தை இராணுவம் முழுமையாக கையப்படுத்தியிருந்தது. அதில் இதுவரை 69,754 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளையும் அதன் உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படடுள்ளது.
இவ்வருடம் முடிவதற்கு இன்னமும் ஒருநாள் மாத்திரமே எஞ்சியுள்ள நிலையில், ஜனாதிபதியின் வாக்குறுதி தொடர்பாக மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். அத்துடன் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினாலும் வடக்கு மாகாண மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி வழங்கிய வாதக்குறுதியை நிறைவேற்றி, தம்மை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்ற வேண்டும் என்று வடக்கு கிழக்கு மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.