மட்டக்களப்பு, கல்லடிப் பாலத்துக்கு அருகிலுள்ள வடிச்சல் பகுதியிலுள்ள காணியொன்றில், மட்டக்களப்பு மாநகர சபையினர், எல்லைக்கல் நடும் பணிகளை இன்று (30) காலை முன்னெடுத்த போது அங்குவந்த சிலர், அதனைத் தடுக்கு முற்பட்டமையால், அப்பகுதியில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அரச காணியென அடையாளப்படுத்தப்பட்ட குறித்த காணியில், மட்டக்களப்பு மாநகர சபையின் மேயர் தி.சரவணபவன் தலைமையிலான குழுவினர் எல்லைக்கல் நடும் பணிகளை முன்னெடுத்த போதே இவ்வாறு தடுக்க முற்பட்டுள்ளனர்.
எல்லைக்கல் நடும் பணிகள் முன்னெடுக்கவிருந்த காணி, அரச காணி என்ற போதிலும் அக்காணி தன்னுடையதென உரிமைகொண்டாடும் ஒருவர், அதுதொடர்பில், காவல் நிலையத்தில் எவ்விதமான முறைப்பாட்டையும் செய்யாது, காவல் நிலையமொன்றுக்குச் சொந்தமான வாகனத்திலேயே அவ்விடத்துக்கு வந்து மாநகர சபையின் செயற்பாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், அங்கு சென்ற காவல்துறையினர் மாநகர மேயரை, காவல் நிலையத்துக்கு அழைத்துச்செல்ல முற்பட்ட போதும் அங்கிருந்த இளைஞர்கள் அதற்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததனால் காவல்துறையினர் அங்கிருந்து சென்று விட்டதாகவும் இதனால் அங்கு பிற்பகல் வரையில் பதற்றமான சூழல் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்;டுள்ளது
சட்டபூர்வமற்ற ஆவணங்களுடன் ஒரு குழு நீண்டகாலமாக, குறித்த காணியை அபகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது எனவும் அப்பகுதி பொதுமக்களின் முயற்சியினால் அது தடுத்து நிறுத்தப்பட்டது எனவும் மட்டக்களப்பு மாநகரசபை மேயர் சரவணபவன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அக்காணியின் மீதான நடவடிக்கையை நிறுத்துமாறு அரச அதிபர், பிரதேச செயலாளருக்கு அமைச்சர் வஜிர அபேவர்தனவால் பணிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த மாநகர மேயர் சரவணபவன், அக்காணி அரசாங்க காணி என்பதற்கான சகல ஆவணங்களும் தன்னிடம் உள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.
எந்தவிதமான சட்டரீதியான ஆவணங்களும் இல்லாமல், காவல்துறையினருடன் வந்த நபர், பிரதேச செயலாளர் தனக்குக் கடிதமொன்றை வழங்கியுள்ளதாகத் தெரிவித்திருந்த போதிலும் அவர், எந்தவொரு ஆவணத்தையும் கொண்டுவந்திருக்கவில்லை எனவும் மாநகர மேயர் தெரிவித்துள்ளார்.