குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடபிராந்திய இணைந்த தொழில்சங்க ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் ஒரு பகுதி வடபிராந்திய போக்குவரத்துச் சபைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக இன்று பிற்பகல் அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டது. ஒதுக்கப்பட்ட பகுதி போக்குவரத்துச் சபையினரிடம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் வடபிராந்திய போக்குவரத்துச் சபை ஊழியர்களின் பணிப் புறக்கணிப்பு போராட்டம் இன்று பிற்பகல் 2 மணியுடன் முடிவுக்கு வந்துள்ளது என ஒற்றிணைந்த தொழிற்சங்கத்தின் செயலாளர். அ.அருள்பிரகாசம் தெரிவித்தார்.
தமது கோரிக்கை நிறைவேற்றப்பட்ட நிலையிலேயே போராட்டம் கைவிடப்பட்டது எனவும் பேருந்து சேவைகள் வடக்கு முழுவதும் இன்று பிற்பகல் 3 மணி முதல் வழமைக்கு திரும்பும் எனவும் தெரிவித்தார்.
வடபிராந்திய இணைந்த தொழில்சங்க ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
Jan 4, 2018 @ 06:48
இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய இணைந்த தொழில்சங்க ஊழியர்கள் இன்று வியாழக்கிழமை காலை முதல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வடக்கு மாகாண முதலமைச்சருடன் நேற்று மாலை இடம்பெற்ற பேச்சுக்களில் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. தொடர்ந்து பணிப்புறக்கணிப்பை தொடரவுள்ளோம் என தெரிவித்து இன்று முதல் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளோம் என தொழிற்சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்
இதேவேளை, வட பிராந்திய போக்குவரத்துச் சபை ஊழியர்கள் 3 நாள்களாக முன்னெடுத்த வேலை நிறுத்த போராட்டம் நேற்று பிற்பகலுடன் நிறைவடைவதாக முன்னர் அறிவுக்கப்பட்டது. இ.போ.சவின் அதிகாரிகள் கொழும்பிலிருந்து வந்து முதலமைச்சரிடன் நடத்திய பேச்சுககளின் பின்னரே அவ்வாறு அறிவிக்கப்பட்டது.
எனினும் சந்திப்பை மேற்கொண்ட தொழிற்சங்கத்தினர் குழப்பத்தினை ஏற்படுத்தி பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றார்கள். குறித்த போராட்டம் கடந்த முதலாம் திகதி முதல் நடைபெற்று வருவதனால் , மாணவர்கள் , அரச பணியாளர்கள் என பலரும் போக்குவரத்து நெருக்கடியினால் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றார்கள்.