இராஜகிரிய சந்தியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேம்பாலம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நான்கு வழிப்பா தைகளை கொண்ட இந்த மேம்பாலத்தின் நீளம் 533 மீற்றர்களாகும். இராஜகிரிய, பொரள்ளை போன்ற பகுதிகளில் நிலவும் கடுமையான வாகன நெரிசலுக்கு தீர்வு காணும் நோக்கோடு குறித்த பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஸ்பெயின் நிறுவனமும் உள்நாட்டு நிறுவனமும் இணைந்து 2016 இல் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதோடு, இதற்காக 4,700 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இராஜகிரிய மேம்பாலம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கைக்கு அமைவாகவே திறக்கப்பட வேண்டும் :
Jan 6, 2018 @ 05:54
இராஜகிரியவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேம்பாலம், தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள, சுற்றறிக்கைக்கு அமைவாகவே திறக்கப்பட வேண்டும் என ட்ரான்ஸ்பரன்சி இன்டநெசனல் நிறுவனத்தின் தேர்தல்கள் கண்காணிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது
மேலும், எதிர்வரும் பெப்ரவரி 10ம் திகதிக்கு முன்னர் குறித்த பாலம் திறக்கப்படுமாயின், அதில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அல்லது அரசியல்வாதிகள் எவரும் கலந்து கொள்ளக் கூடாது எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் இந்த விடயம் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக, ட்ரான்ஸ்பரன்சி இன்டநெசனல் நிறுவனத்தின் தேர்தல்கள் கண்காணிப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
எதிர்வரும் 08ஆம் திகதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் இராஜகிரிய பாலம் மக்களின் பாவனைக்கு திறந்து விடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
கொழும்பு வாகன நெருக்கடிக்குத் தீர்வு – இராஜகிரிய மேம்பாலம் 08ஆம் திகதி திறந்து வைப்பு
Jan 4, 2018 @ 14:01
நீண்ட காலமாக பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் இராஜகிரிய பிரதேசத்தில் காணப்படும் வாகன நெருக்கடிக்கு தீர்வுகாணும் வகையில் இராஜகிரிய சந்தியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேம்பாலம் எதிர்வரும் 08ஆம் திகதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் மக்களின் பாவனைக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.
குறித்த பாலத்தின் நிர்மாணப்பணிகள் இவ்வருட இறுதியிலேயே நிறைவுசெய்ய திட்டமிடப்பட்டிருந்த போதிலும் பொதுமக்களின் அசௌகரியங்களை கருத்திற்கொண்டு அதன் நிர்மாணப்பணிகளை 11 மாதங்களுக்கு முன்னரே நிறைவு செய்ய ஜனாதிபதி ஆலோசனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். ஸ்பெயின் நாட்டு நிறுவனமும் உள்நாட்டு நிறுவனமும் இணைந்து 2016 இல் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட இந்த மேம்பாலத்திற்கான மொத்த செலவு 4,700 மில்லியன் ரூபாய்களாகும்.
நான்கு வாகன ஓடுபாதைகளை கொண்டுள்ள இந்த மேம்பாலத்தின் நீளம் 534 மீற்றர்களாக காணப்படுவதுடன் 150 மீற்றர் நீளமுடைய பிரவேச மார்க்கத்தையும் இது கொண்டுள்ளது. இதனுடன் இணைந்ததாக இதனைச் சூழவுள்ள பல வீதிகளும் அபிவிருத்தி செய்யப்படுவதுடன் நாராஹேன்பிட்ட நோக்கிப் பயணிப்பதற்கான மாற்றுவழிப் பாதையும், புத்கமுவ நோக்கி பயணிப்பதற்கான மூன்று வாகன ஓடுபாதைகளைக் கொண்ட வீதியும் இதனூடாக அபிவிருத்தி செய்யப்படுகின்றன.
உயர் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பொறியியல் நியமங்களுக்கு அமைவாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த மேம்பாலம் இரும்பின்மீது கொங்றீட் பரவி இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முதலாவது மேம்பாலமாகவும் இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மிக அலங்காரமான மேம்பாலமாகவும் வரலாற்றில் இடம்பெறுகின்றது.