பாகிஸ்தானிற்கு, அளித்துவந்த, பாதுகாப்பு உதவிகளை அமெரிக்கா முழுவதுமாக நிறுத்துகிறது. அந்நாட்டில் செயல்பட்டு வரும், பயங்கரவாத குழுக்களை சரியாக கையாள தவறியதே இதற்கு காரணம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆப்கான் தாலிபான் மற்றும் ஹக்குவனி குழுக்களுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் வரையில், இந்தத் தடை தொடரும் என அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் லட்சக்கணக்கான பண உதவிகளை பெற்றபோதிலும், பாகிஸ்தான் தங்களிடம் பொய் கூறி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்த வாரத்தொடக்கத்தில் தெரிவித்திருந்தார்.
டிரம்பின் இக்கருத்தையடுத்து, “பல தசாப்தங்களாக பாகிஸ்தான் செய்துவந்த தியாகத்தை அமெரிக்கா மறந்துவிட்டதாக” பாகிஸ்தான் கூறியது. அமெரிக்காவின் இந்த நிலைப்பாட்டை, ஆப்கானிஸ்தான், இந்தியா உள்ளிட்ட நாடுகள் வரவேற்றாலும், சீனா பாகிஸ்தானிற்கே தொடர்ந்து ஆதரவளிக்கிறது. 255 மில்லியன் டொலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை பாகிஸ்தானிற்கு அனுப்புவதில், அமெரிக்கா ஏற்கனவே காலம் தாழ்த்தியது. இந்த தடை குறித்து அறிவித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஹெதர் நியூவர்ட், எவ்வளவு உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது என்பதை, டொலர்கள் மதிப்பில் கூற இயலவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
ஆப்கான் தாலிபான்களும், ஹக்குவனி குழுக்களும், `அந்த பகுதிகளை அழிப்பதோடு, அமெரிக்க அதிகாரிகளை குறிவைக்கின்றனர்` என்றும் அவர் தெரிவித்தார். ஆப்கான் தாலிபான், ஹக்குவனி குழுவினருக்கு பாதுகாப்பான இடமாக பாகிஸ்தான் இருப்பது குறித்து அமெரிக்காவும், பிறநாடுகளும் பல காலமாக முறைப்பாடு அளித்து வருகின்றன. எல்லைதாண்டி ஆப்கானிஸ்தானை தாக்குவதற்கு, இந்த குழுவினரை, பாகிஸ்தான் அனுமதிப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பதவியேற்றது முதல் டிரம்ப் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் மறுத்து வருகிறது.
செப்டம்பர் 11ஆம் தேதி, அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டது முதல், பயங்கரவாத்ததிற்கு எதிரான போரில், அமெரிக்காவுடன் கைகோர்த்தது பாகிஸ்தான். அதிலிருந்து, பல பில்லியன் மதிப்பிலான உதவிகளை அமெரிக்காவிடம் இருந்து பாகிஸ்தான் பெற்றுள்ளது. ஆனால் அமெரிக்காவின் கோபத்தால், இந்த உதவித்தொகைகள் தொடர்ந்து குறைந்து வந்தன. ஆனாலும், பாகிஸ்தான் அளித்துவந்த ஒத்துழைப்பின் காரணமாக, இந்த கடினமான உறவு தொடர்ந்தது. பயங்கரவாதிகளுக்கு எதிரான நீண்ட சண்டையில், தாங்கள் அதிக இழப்புகளை கண்டுள்ளதாகவும், இந்த சண்டைகளில் தங்களின் பங்களிப்பு என்ன என்பதை அங்கீகரிப்பதில் ஜனாதிபதி டிரம்ப் தோல்வியுற்றுள்ளார் எனவும், இதயம் அற்ற குற்றச்சாட்டை அமெரிக்கா முன்வைப்பதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.